தலையிலடித்துக் கொண்டு கதறியழுத கே.என்.நேரு-இறுதி ஊர்வலத்தில் உருக்கம்!
திருச்சி: திருச்சியில் நேற்று காலை படுகொலை செய்யப்பட்ட தனது தம்பி ராமஜெயத்தின் உடலைப் பார்த்து தலையிலும், வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு வாய் விட்டுக் கதறியழுதார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. அவர் அழுததைப் பார்த்து ஆறுதல் கூற வந்த முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரும் அழுததால் அந்த இடமே நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது. பெரும் சோகத்துடன் அருகில் அமர்ந்திருந்த முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் முகத்தில் துக்கம் ததும்பி வழிந்தது.
நேற்று காலை வழக்கம் போல வாக்கிங் சென்ற ராமஜெயம் காரில் கடத்திச் செல்லப்பட்டு கை, கால்களைக் கட்டி கொல்லப்பட்டார். அவரது உடலை திருவளர்ச்சோலை என்ற இடத்தி்ல வைத்து கண்டுபிடித்து மீட்டனர்.
தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் கே.என்.நேருவுக்குக் கிடைத்தபோது அவர் சென்னையில் இருந்தார். பதறிப் போன அவர் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு திருச்சி விரைந்தார். நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தனது தம்பியின் உடலைப் பார்த்து கதறியழுதார்.
தலையில் அடித்துக் கொண்டும், வயிற்றிலும், மார்பிலும் அடித்துக் கொண்டும் அவர் கதறி அழுததைப் பார்த்து உடன் வந்த திமுகவினரும் அழுதனர். இதனால் அந்த இடமே சோகமாக மாறியது.
பின்னர் தன்னை சந்திக்க வந்த திமுக முன்னணித் தலைவர்களான மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரைப் பார்த்தபோதும் நேரு கதறியழுதார். தனது தம்பியைச் சொல்லிச் சொல்லி அவர் அழுதபோது அவரை கட்டுப்படுத்த முடியாமல் துரைமுருகனும், வீரபாண்டி ஆறுமுகமும் கூட அழுதனர்.
வீரபாண்டி ஆறுமுகம்தான், நேருவைக் கட்டிப்பிடித்து தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்த முயன்றார். இருந்தாலும் நேருவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாராலும் கட்டுப்படுத்த முடியவிலல்லை. இந்த உருக்கமான காட்சியை கலங்கிய கண்களுடன் பெரும் சோகத்துடன் இறுக்கமான முகத்துடன் மு.க.ஸ்டாலின் பார்த்தபடி அமர்ந்திரு்நதார்.
அதேபோல இன்று ராமஜெயத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியபோதும் கூட கே.என்.நேரு கதறியழுதபடியேதான் இருந்தார். அவரும், ராமஜெயத்தின் குடும்பத்தினரும்,நேருவின் குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் சோகத்துடன் அழுதபடி இருந்ததால் திமுகவினரும் சோகத்தைத் தாங்க முடியாமல் கலங்கிப் போய்க் காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications