ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டனையும் சந்திக்க நான் ரெடி... ராஜபக்சே உறுமல்!

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு சற்றும் வலி தெரியாத வகையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நயமாக்கி, மென்மையாக்கி நிறைவேற்ற உதவியது இந்தியா. இருந்தும் பெரும் கடுப்புடன் இருக்கிறது இலங்கை. இந்தியா மீது கோப்படுகிறது. சர்வதேச நாடுகள் மீது கோப்படுகிறது. கொந்தளிக்கிறது, மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜெனீவாவை மட்டுமல்ல வாஷிங்டனையும், நியூயார்க்கையும் கூட நாங்கள் சந்திக்கத் தயார் என்று வாய்ச் சவடாலாகப் பேசியுள்ளார் ராஜபக்சே.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்று இலங்கை பலத்த சவால்களைச் சந்தித்து நிற்கிறது. ஆனால் இத்தகைய சவால்கள் எமக்குப் புதியவையல்ல. இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட காலத்தில் இருந்து பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது. அதுபோல் இப்போதும் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள நாம் தயார்.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக ஒன்றுபட்ட குரலை எம்மால் வெளிப்படுத்த முடிந்தது. எரிபொருள் விலை உயர்வு, அனைத்துலக நிதி நெருக்கடி காரணமாக வங்கிகள் மூடப்பட்டமை, பயங்கரவாதம் போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது.
அணிசேரா கொள்கை மூலம் இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது. தொடர்ந்தும் நாம் அணிசேராமல் இருப்போம்.
ஜெனீவா மட்டுமல்ல, வாஷிங்டன், நியூயார்க் என எங்கிருந்து வந்தாலும் அதை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என்றார் ராஜபக்சே.
அமெரிக்காவையும், ஐ.நா. சபையையும் மனதில் வைத்துத்தான் இப்படி வாஷிங்டன், நியூயார்க் எனப் பேசியுள்ளார் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications