புதிய தலைமை செயலக கட்டிடம் அரைகுறையாக கட்டப்பட்டது: ஜெயலலிதா
சென்னை: திமுக ஆட்சியில் எல்லாமே அரைகுறையாக இருந்தது. புதிய தலைமை செயலக கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீது நடந்த விவாத விவரம்:
துரைமுருகன் (திமுக): துறைமுகம்-மதுரவாயல் மேம்பால வேலை ரூ. 18,000 கோடி செலவில் மத்திய அரசின் நிதியில் நடந்து வந்தது. அந்த பணி நிறுத்தப்பட்டு விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறதே இது உண்மையா?
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: இந்தத் திட்டம் சரியான முறையில் ஆராய்ந்து கொண்டு வரப்படவில்லை. அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்டது.
அமைச்சர் வைத்திலிங்கம்: நீர்நிலையில் தூண்கள் அமைக்கப்படுவதால் நீர் நிலை ஆதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
துரைமுருகன்: மீண்டும் இந்த பணி தொடர அரசு முயற்சி எடுக்க வேண்டும். மக்கள் பணம் வீணாக கூடாது. இதே போல்தான் புதிய தலைமை செயலகம் கட்டிடத்தையும் நாங்கள் கட்டினோம். இந்த சட்டசபையில் இடநெருக்கடி இருப்பதாக கூறி அதிமுக ஆட்சியிலும் வேறு இடம் பார்த்தீர்கள். ஆனால் திமுக ஆட்சியில் கட்டியது என்பதற்காக அதை அப்படியே போட்டு விடுவதா? மக்களின் வரிப் பணம் தானே வீணாகிறது.
அமைச்சர் கே.பி.முனுசாமி: புதிய தலைமை செயலகம் மிக உயர்ந்த மருத்துவமனையாகத்தான் மாறுகிறது.
துரைமுருகன்: அது எங்கள் வீட்டு பணத்தில் கட்டியது அல்ல. அரசாங்கத்தின் பணம்.
அமைச்சர் நத்தம் விசுவநாதன்: அந்த பணத்தை பயனுள்ள முதலீடாகதான் இந்த அரசு மாற்றுகிறது.
முதல்வர் ஜெயலலிதா: துரைமுருகன் பேசும்போது ஏதோ இந்த சட்டமன்றத்தில் இட நெருக்கடி இருந்ததாகவும், அதனால் வேறு இடம் பார்த்ததாகவும் கூறினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்து இந்த அரசு வீணடிப்பதாக கூறினார். அவர் சொல்லும் அடிப்படையே தவறு. இந்த சட்டசபையில் இட நெருக்கடி என்று நான் சொல்லவில்லை. ஒட்டு மொத்த தலைமை செயலகத்தில் தான் இட நெருக்கடி என்று கூறினோம். சரி, திமுக ஆட்சியில் விசாலமான இடத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் முழுமையாக தலைமை செயலகத்துக்கு பயன்பட்டதுபோல் துரைமுருகன் குறிப்பிட்டார்.
தமிழக அரசில் மொத்தம் 36 துறைகள் உள்ளன. புதிய தலைமை செயலகத்துக்கு கடைசி வரை 6 துறைகள் தான் மாற்றப்பட்டு செயல்பட்டன. மீதி 30 துறைகள் கோட்டையில் தான் செயல்பட்டன. இவர்கள் அரைகுறையாக கட்டிவிட்டு அங்குமிங்குமாக அதிகாரிகள் அலைய வேண்டிய நிலையை உருவாக்கினர். அங்கு 36 துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். ஆனால் 6 துறைகளுக்கு மட்டுமே இடம் இருக்கும். மீதி 30 துறைகளுக்கு அலுவலகம் கிடையாது. இதனால்தான் நிர்வாகத்தில் குழப்பம், தாமதம் ஏற்பட்டது.
கோட்டையில் இருந்து அலுவலகத்தை மாற்ற வேண்டுமானாலும் ஒரே ஒரு துறைக்கு மட்டுமே இடம் இருந்தது. எல்லாமே அரைகுறையாக இருந்தது. அந்தக் கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணன் (திமுக): ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
அமைச்சர் கே.பி. முனுசாமி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் புரட்சித் தலைவி தொடங்கி வைப்பார்.
மேலூர் சாமி: மேலூரில் இருந்து சென்னைக்கு புதிய பஸ் விடப்படுமா?
அமைச்சர் செந்தில் பாலாஜி: புதிய பஸ் விட நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications