ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்கிறது.. அரசு வரியை உயர்த்தியதன் எதிரொலி!

சமீபத்தில் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணங்கள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டன. இந் நிலையில் தனியார் சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு நேற்று முன் தினம் அதிகரித்தது.
இதன்படி படுக்கை வசதி கொண்ட பஸ்கள் உள்ளிட்ட ஆம்னி பஸ்களை பொறுத்தவரை, தற்காலிக உரிமம் 7 நாட்களுக்கு இருந்தால், நுழைவு ஒன்றுக்கு, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.600ம், தற்காலிக உரிமம் 7 நாட்களுக்கு மேற்பட்டு ஆனால் 30 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்கு நுழைவு ஒன்றுக்கு இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.1,500ம், தற்காலிக உரிமம் 30 நாட்களுக்கு மேற்பட்டு ஆனால் 90 நாட்களுக்கு மேற்படாத கால அளவிற்கு நுழைவு ஒன்றுக்கு, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒன்றுக்கு ரூ.3,500ம் வசூலிக்கப்படவுள்ளது.
இதையடுத்து பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
ஒரு சில ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை தாங்களாகவே ரூ. 50 வரை உயர்த்திவிட்டனர்,
இது குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில், 90 நாட்களுக்கு இருக்கை ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணத்தை வரியாக செலுத்தி வருகிறோம்.
தற்போது தமிழக அரசு வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வு மூலம் ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.3,000ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கிறது. இந்த கூடுதல் வரி உயர்வால் 90 நாட்களுக்கு ரூ.40,000 கூடுதல் செலவாகிறது.
இது மட்டும் அல்லாமல் நுழைவு வரி மூலம் ரூ.20,000 கூடுதல் செலவாகிறது. எனவே ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என்கின்றனர்.
அமைச்சருடன் பேச்சுவார்த்தை:
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறுகையில், கட்டணத்தை உயர்த்துவது குறித்து பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த பிறகு ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications