சட்டசபையில் தகாத வார்த்தையைப் பிரயோகித்ததாக திமுக எம்.எல்.ஏ வெளியேற்றம்
சென்னை: ஒரு வார சட்டசபை புறக்கணிப்புக்குப் பின்னர் இன்று சட்டசபைக்குத் திரும்பிய திமுக உறுப்பினர்கள் பெரும் சோதனையை சந்திக்க நேரிட்டது. அக்கட்சி உறுப்பினர் ஜே.அன்பழகன், தகாத வார்த்தையைப் பிரயோகித்ததாக கூறி சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதேபோல திமுகவினரும் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசுகையில், அன்பழகன் குறுக்கிட்டுப் பேசினார். அதைக் கேட்டு எழுந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உறுப்பினர் அன்பழகன் தகாத வார்த்தையைப் பிரயோகித்ததாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அவை முன்னவரான ஓ.பன்னீர் செல்வத்தின் புகாரை ஏற்று, அன்பழகனை அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அன்பழகன் வெளியேற்றப்பட்டார்.
இதுபோல் இனியும் அவர் நடந்து கொண்டால் கூட்டத்தொடர் முழுவதும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் சபாநாயகர் எச்சரித்தார். அதை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications