இன்விடேஷனில் 'அண்ணன்' பெயரில்லாததால் ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணித்தோம்: அழகிரி ஆதரவாளர்கள்
மதுரை: திமுக இளைஞர் அணி நேர்காணல் நிகழ்ச்சி மற்றும் கண்டன பொதுக்கூட்ட அழைப்பிதழ்களில் மத்திய அமைச்சர் முக அழகிரியின் பெயரைப் போடததால் தான் அவற்றில் கலந்துகொள்ளவில்லை என்று திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி மதுரையில் திமுக இளைஞர் அணி நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன் பிறகு மின் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. அந்த நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் முக அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் கடுப்பான ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை என்றால் தான் கட்சி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மதுரை நகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம், மன்னன், ஜெயராஜ் மாவட்ட துணைச்செயலாளர்கள் சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், பொன்சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டிய ராஜன், முபாரக் மந்திரி, முருகன், ராமலிங்கம் ஆகிய 17 பேருக்கு தலைமைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் அவர்கள் நிகழ்ச்சிகளை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த சில இளைஞர்களை அதில் பங்கேற்கே விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்ப்டடுள்ளது. இந்த நோட்டீஸுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 2 நிகழ்ச்சிகளில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கிடையே மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சொல்லித் தான் பிற நிர்வாகிகள் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று திமுக வட்டாரத்தில் பேச்சு அடிப்ட்டது.
நோட்டீஸ் பெற்றவர்கள் அதற்கு உரிய விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளனர். மு.க. அழகிரி நாளை மதுரைக்கு வந்ததும் அவரிடம் இது குறித்து முறையிடவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் கூறுகையில்,
மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சி குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 10ம் தேதி நடந்தது. மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரி வெளிநாட்டில் இருக்கும்போது இளைஞர் அணி நேர்காணல் நிகழ்ச்சியை மதுரையில் நடத்த வேண்டுமா என்று நிர்வாகிகள் கேள்வி எழுப்பினோம்.
கட்சி மேலிடம் தேதியை அறிவித்துவிட்டதால் அன்றே நடத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தளபதி கூறினார். சரி இரண்டு நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் அழகிரியின் பெயரைப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் அழகிரியின் பெயரைப் போடவில்லை. இதனால் வருத்தமடைந்த நாங்கள் நிகழ்ச்சிகளை புறக்கணித்தோம்.
எங்களைத் தவிர்த்து மதுரை மாநகரில் உள்ள 72 வட்டக்கழக செயலாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் யாருமே இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. திமுக ஒரு ஜனநாயகக் கட்சி. அதில் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் தான். அதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். தலைமைக் கழகம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து அண்ணன் அழகிரியிடம் ஆலோசித்து பதில் அளிப்போம் என்றார்.
ரவீந்திரன் தவிர அவைத்தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகளும் இதே கருத்தை தெரிவித்தனர். நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications