தர்மபுரியில் ஆசிரியையை தாக்கிய டி.எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை: ஜெயலலிதா

இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகையில், தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் 'உங்கள் சொந்த இல்லம்' என்ற திட்டத்தின்படி ஏற்கனவே வீடுகளை கட்டியது. ஆனால் தற்போது வாடகை குடியிருப்புகளை மட்டுமே கட்டுகிறது. தமிழ்நாட்டில் நெல்லை, நாமக்கல் மாவட்டங்களில் 206 வீடுகளை உங்கள் சொந்த இல்லம் என்ற திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டியது. இது போதாததுதான். காவலர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க இந்த அரசு ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்தும்.
பாலபாரதி: தமிழ்நாட்டில் திருட்டு, கொலை, கொள்ளை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
ஜெயலலிதா: கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக ஆட்சியில் பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படுவது இல்லை. குற்ற எண்ணிக்கையை பதிவு செய்யாமல் திட்டமிட்டு குறைவாக காட்டினார்கள். இப்போது எனது ஆட்சியில் போலீஸ் நிலையத்தில் யார் புகார் கொடுத்தாலும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன். குற்றம் எந்த போலீஸ் நிலைய எல்லையில் நடந்து இருந்தாலும் புகார் எங்கு கொடுக்கப்பட்டதோ அங்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இன்று அதிகம் பேர் புகார்களை தருகிறார்கள். எனவே குற்ற எண்ணிக்கை அதிகம் என்பது தவறு.
பாலபாரதி: தர்மபுரியில் ஆசிரியை தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் பெற வந்த ஆசிரியையை டி.எஸ்.பி. தாக்கி கீழே தள்ளி இருக்கிறார்.
ஜெயலலிதா: தர்மபுரியில் 27.3.2012 அன்று ஆசிரியை தகுதி தேர்வு விண்ணப்பம் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஏராளமான ஆசிரியைகள் கூடினார்கள். அங்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் தீர்ந்து விட்டதால் மறுநாள் வர சொல்லி இருக்கிறார்கள். அப்போது லெனின் குமார், கருணாமூர்த்தி, திருமதி ஜீவா உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டபோது, அங்கு 2 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது தர்மபுரி டி.எஸ்.பி., திருமதி ஜீவாவை தள்ளி விட்டதாக புகார் வந்ததன் பேரில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தர்மபுரியில் நடந்தது என்ன?:
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. விண்ணப்பங்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பட்டதாரிகள் அதிகாலை முதலே வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிலர் விண்ணப்பங்களை கூடுதல் விலைக்கு வெளியே விற்பது தெரியவந்தது.
இதையடுத்து விண்ணப்பம் வாங்க வந்து காத்திருந்தவர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களுக்கு விண்ணப்பம் தர மறுக்கிறீர்கள், ஆனால் வெளியில் தாராளமாக கூடுதல் விலைக்கு விற்கிறார்களே என்று அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் விண்ணப்பம் வழங்கும் மையத்தின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த தர்மபுரி நகர டி.எஸ்.பி. சந்தானபாண்டியன், மறியலை கைவிட்டு கல்வி அலுவலகத்திற்கும் வருமாறு அவர்களை அழைத்தார். அதற்கு ஒரு ஆசிரியை வர முடியாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது டி.எஸ்.பி. சந்தானபாண்டியனுக்கும், அந்த ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைடுத்து அந்த ஆசிரியையை போலீசார் பிடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.
இதை அந்த ஆசிரியையுடன் வந்த அவரது கணவர் கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் அந்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்தார்.
இதற்கு அந்த ஆசிரியர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவரை டி.எஸ்.பி. சந்தாபாண்டியன் மீண்டும் தாக்கினார். கணவரை மீட்க வந்த ஆசிரியையும் டி.எஸ்.பி. கழுத்தை பிடித்து கீழே தள்ளினார். ஆசிரியை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்படியும் விடாமல் அந்த ஆசிரியரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை குடிபோதையில் இருந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதையடுத்தே அவரை விடுவித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவர் மீது பொய் வழக்கு போட நடவடிக்கை எடுத்து தாக்கப்பட்டவரையே மன்னிப்பும் வாங்க வைத்தனர்.
இந் நிலையில் சந்தானபாண்டியனுக்கு எதிராக சமீபத்தில் ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications