கூட்டுறவுத் துறையை சீரழித்தது திமுகதான்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: தமிழகத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வந்த கூட்டுறவுத் துறையை சீரழித்தது திமுகதான் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் உணவுத்துறை, கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தில் பேசிய தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன், ரேஷனில் கோதுமை வழங்கப்படுகிறது. ஆனால் அதை பெரும்பாலானவர்கள் வாங்குவதில்லை. கோதுமையுடன் கூடுதலாக கேழ்வரகு, கம்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு வறுமையினால் கூழ் சாப்பிட்டனர். இப்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு கூழ் சாப்பிடுகிறார்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கேழ்வரகு, கம்பு ஆகியவை தேவைக்கு ஏற்ப விவசாயம் செய்யப்படுவதில்லை. சில பகுதிகளில் மட்டுமே அவை பயிரிடப்படுகின்றன என்றார்.
வெற்றிலையா?, வெற்றி இலையா?:
கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள், அமைச்சர்கள் இடையே வெற்றிலை குறித்த ருசிகர விவாதம் நடந்தது.
பெரியகுளம் லாசர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மங்களகரமான பொருளான வெற்றிலைக்கு பெரியகுளம் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா?
விவசாயத்துறை அமைச்சர் தாமோதரன்: பெரியகுளத்தில் உள்ள தோட்ட கலை ஆராய்ச்சி மையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: வெற்றிலை- வெற்றி இலையை, மங்களகரமான இலை என்று குறிப்பிட்ட உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கு.ப.கிருஷ்ணன் (அதிமுக): வெற்றிலையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? அதற்கென்று ஒருநாளை வைத்து விழா கொண்டாட வேண்டும்.
அமைச்சர் தாமோதரன்: பரிசீலிக்கப்படும்.
அப்போது புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கருத்தை சொல்ல, அதை அதிமுகவினர் எதிர்க்க, இதையடுத்து அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் ஜெயக்குமார் நீக்கிவிட்டார்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: வெற்றிலையுடன் 2 உப்பு கல்லை சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனை வராது என்று பாட்டி வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது. வெற்றிலையால் எந்த வாய் புற்றுநோயும் வருவதில்லை. புகையிலையோடு சேர்த்து உண்டால் தான் புற்றுநோய் வருகிறது.
செளந்தரராஜன் (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): வெற்றிலையில் மருத்துவ குணம் உள்ளது என்பது உண்மை. வெற்றிலையில் எத்தகைய மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்.
இந்த விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஒழுங்கு பிரச்சனை ஒன்றை எழுப்பி கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் இந்த அரசு விரும்புகிறது. ஆனால் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் உள்ளன. எனவே இந்த வழக்குகள் முடிந்த பிறகுதான் தேர்தலை நடத்த முடியும்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் முடிந்து தீர்ப்பு வந்ததும் அதன் பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தலை எந்த அடிப்படையில் எப்படி நடத்துவது என்பது குறித்து முதலமைச்சர் ஒரு வல்லுனர் குழுவை நியமித்து ஆய்வு நடத்தி அதன் பிறகு முறையாக தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டிருக்கிறது என்றார்.
இதையடுத்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த 1990-91ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை முறைகேடாக நடத்தினார்கள். கூட்டுறவு சங்கங்களில் திமுகவினர்களை மட்டுமே உறுப்பினர்களாக்கி மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இருந்தால் அவர்களை நீக்கி விட்டு தேர்தலை நடத்தினார்கள். மீண்டும் அதே முறையில்தான் 1996ம் ஆண்டும் மற்றவர்களை நீக்கி விட்டு திமுகவினரை மட்டுமே வைத்துக் கொண்டு முறைகேடாக தேர்தலை நடத்தினார்கள்.
அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்கிற சட்டத்தை பயன்படுத்தி 2007ம் ஆண்டும் அதே முறையில் தேர்தலை நடத்த முயற்சித்தனர். இன்றைய முதல்வரும் எதிர்க்கட்சியினரும் பலமாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த தேர்தலை ரத்து செய்தார்கள்.
கடந்த 23 ஆண்டுகளாக கூட்டுறவு துறையை முறையாக செயல்பட விடாமல் தடுத்து சீரழித்தது திமுகதான். இதில் நேரடியாக நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன். கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த என்னை நீக்கி விட்டு நான் ஓட்டு போட முடியாத நிலையை உருவாக்கினார்கள். இந்த வகையில் கூட்டுறவு துறை இந்த அளவு சீரழிக்கப்பட்டதற்கு திமுகதான் காரணம் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.











Click it and Unblock the Notifications