நில அபகரிப்பு வழக்கு: ஸ்டாலின் மீ்து கைது நடவடிக்கை பாயாதது ஏன்... சட்டசபையில் ஜெ. விளக்கம்
சென்னை: மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட நில அபகரிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வேணுகோபால் ரெட்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வேணுகோபால் ரெட்டிக்கும்; சொத்தை விற்ற சேஷாத்ரி குமாருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, வேணுகோபால் ரெட்டி, சேஷாத்ரி குமாருக்கு வரைவோலை மூலம் ரூ.1.75 கோடி கொடுத்துள்ளார். இதையடுத்து சேஷாத்ரி குமார், ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதனடிப்படையில், ஸ்டாலின் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால்தான் ஸ்டாலின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் ஆற்றிய உரை:
திமுகவினர் தங்கள் கட்சியினர் மீதும், முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் மீதும் உண்மைக்கு மாறாக நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுகின்றன என்ற தவறான குற்றச்சாட்டுக்களை இந்த சட்டப் பேரவையிலும், அவைக்கு வெளியிலேயும் தெரிவித்து வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.
முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது, சட்டவிரோத கும்பல்கள் நிலம் மற்றும் சொத்துக்களின் உரிமையாளர்களை மிரட்டியும்; அவர்களைக் கடத்திச் சென்றும்; அவர்களது சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு பதிவு செய்வதையும்; போலியான ஆவணங்களை தயார் செய்து பொதுமக்களின் சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தன. இதனால் பாதிக்கப்பட்டோர் புகார் அளிப்பதற்கு கூட அஞ்சினர். அதையும் மீறி அளிக்கப்பட்ட புகார்களில் பெரும்பான்மையானவை உதாசீனப்படுத்தப்பட்டன.
எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, நில அபகரிப்பு புகார்களின் மீது சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நில அபகரிப்பு குறித்து துணிச்சலுடன் காவல் துறையினரிடம் புகார் தர முன்வந்தனர்.
தி.மு.க. ஆட்சி காலத்திலேயே நில அபகரிப்பு புகார்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்டுள்ளன. காவல் துறை நடவடிக்கை எடுக்காத இனங்களில், சிலர் உயர்நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்த நிகழ்வுகளும் உள்ளன. 2006லிருந்து 2011 வரை, நில அபகரிப்பு, மோசடி மற்றும் போலி பத்திரங்கள் குறித்து 6615 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1,887 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 375 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், எதிரிகளை கைது செய்வதற்கும், சொத்துக்களை மீட்பதற்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்ட பாரபட்சமற்ற நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் புகார் கொடுக்கின்றனர் என்பதும்; அதனால் நிலங்களை இழந்தவர்கள் தங்கள் நிலத்தை மீளப் பெற்று வருகின்றனர் என்பதும்தான் உண்மை. நில அபகரிப்பு குறித்த ஒரே ஒரு புகார் பற்றி இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.
29.11.2011 அன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் என்.சேஷாத்ரி குமார் என்பவர் கொடுத்த புகாரில், தனது குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த 6 கிரவுண்ட் நிலத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி அங்கு குடியேறியதாகவும், அதன் பின்னர் அந்த வீட்டிற்கு அடுத்து உள்ள தனது வீட்டை விற்க கட்டாயப்படுத்தி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட சிலர் தனது வீட்டை மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும்; அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 16.7.2010 அன்று புகார் செய்ததாகவும்; ஆனால் காவல் துறையினர் அதனை வாங்க மறுத்துவிட்டதாகவும்; அதன் பிறகு பி.வேணுகோபால் ரெட்டி பெயரில் ரூ.51/2 கோடிக்கு வரைவோலை கொடுத்து தனது வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள் என்றும், தற்போது இந்த வீடு உதயநிதி ஸ்டாலின் பெயரில் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை அதில் குடியிருந்து வருகிறார் என்றும் புகார் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தன் வீட்டை மீட்டு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர். உடனே மு.க.ஸ்டாலின் தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ளும் பொருட்டு, ஆவேசமாக காவல்துறை தலைமை இயக்குநரை சந்திக்கச் சென்று, தன்னை உடனே கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
துணை முதலமைச்சராய் இருந்து காவல் துறை சம்பந்தப்பட்ட சில கோப்புகளை கவனித்தவர்; காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது இரு முறை பதில் அளித்தவர் ஸ்டாலின். அப்படிப்பட்ட ஸ்டாலினுக்கு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட ஒரு புகாரின் பேரில் தேவைப்பட்டால், புலன் விசாரணை அதிகாரி தான் கைது செய்வார் என்பது தெரியாதா? நிச்சயம் தெரியும். ஆனாலும், தனது வீராப்பினை காட்டுவதற்காக, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். மேலும், நீதிமன்றத்தின் மூலமாக வழக்கை சந்திப்பதாக சவாலும் விடுத்தார்.
இந்த வழக்கை ஸ்டாலின், நீதிமன்றத்தின் மூலமாக சந்தித்து தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா என்றால் இல்லை. மேற்படி சொத்து சட்டப்படி வாங்கப்பட்டது என்று தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு வேணுகோபால் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வேணுகோபால் ரெட்டிக்கும்; சொத்தை விற்ற சேஷாத்ரி குமாருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, வேணுகோபால் ரெட்டி, சேஷாத்ரி குமாருக்கு வரைவோலை மூலம் ரூ.1.75 கோடி கொடுத்துள்ளார்.
இதனைப் பெற்றுக் கொண்ட சேஷாத்ரி குமார், வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், மற்றும் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டவர்களுக்கு எதிரான புகாரினை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்து, அந்த வழக்கினை முடித்து விடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனடிப்படையில், வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யவில்லை. இதன்மூலம், இந்தப் புகாருக்கு உள்ளானவர்கள், மேற்படி இடத்திற்கு ரூ.1.75 கோடி குறைவாக கொடுத்து நிலத்தை எடுத்துக் கொண்டார்கள் என்பது தானே இதிலிருந்து தெரியவருகிறது? இதை நில அபகரிப்பு என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்லி அழைப்பது?
சென்னையின் மிக முக்கியப் பகுதியான தேனாம்பேட்டையில், இரண்டரை கிரவுண்டு நிலம் மற்றும் 4,432 சதுர அடி கொண்ட கட்டிடத்தை வெறும் ரூ.20,000க்கு வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்கு முன்பு இருந்த வாடகைதாரர் ரூ.1.20 லட்சம் வாடகை அளித்து இருக்கிறார். வேணுகோபால் ரெட்டி ஏன் இவ்வளவு குறைந்த வாடகைக்கு இந்த வீட்டை அளித்தார் என்று மு.க.ஸ்டாலின்தான் விளக்க வேண்டும்.
காவல் துறையினர் தி.மு.க.வினர் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்கிறார்கள் என்று சொன்னால், பதிவு செய்யப்பட்ட 1,225 வழக்குகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் தி.மு.க.வினரா என்றால் நிச்சயமாக இல்லை. தவறு செய்த அனைவர் மீதும் தான் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த அரசு அமைந்ததிலிருந்து 12.4.2012 வரை, 34,703 நில அபகரிப்பு புகார்கள் பெறப்பட்டுள்ளன. பூர்வாங்க விசாரணைக்குப் பின் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,225. புலன் விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 74. ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து மீட்கப்பட்ட சொத்துக்கள் 1,317.15 ஏக்கர் மற்றும் 4.44 லட்சம் சதுர அடி மனைகள். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.758.04 கோடி ஆகும் என்றார் அவர்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications