
ஆட்சியர் அலெக்ஸ் நலம்: மாவோயிஸ்டுகளை சந்தித்த தூதர்கள் தகவல்

சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனன் கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். தங்களது இயக்கத்தைச் சேர்ந்த 17 பேரை விடுவிக்க வேண்டும் என்பது அலெக்ஸ்பால் மேனனை கடத்திய மாவோயிஸ்டுகளின் நிபந்தனை.
இது தொடர்பாக சத்தீஸ்கர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் தரப்பில் பி.டி.சர்மாவையும் ஹர்கோபாலையும் மாவோயிஸ்டுகள் நியமித்தனர். சத்தீஸ்கர் அரசு சார்பில் நிர்மல் புச், எஸ்.கே.மிஸ்ரா ஆகியோர் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். இருதரப்பினரும் ராய்ப்பூரில் 2 நாட்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசின் கருத்தைத் தெரிவிப்பதற்காக தட்மெட்லா வனப்பகுதிக்கு பி.டி.சர்மாவும் ஹர்கோபாலும் நேற்று சென்றனர்.
இன்று காலை வனப்பகுதியிலிருந்து சுக்மாவுக்கு அவர்கள் இருவரும் திரும்பினர். ஆட்சியர் அலெக்ஸ் மாவோக்களின் பிடியில் நலமாக இருப்பதாக மட்டும் அவர்கள் கூறினர். மாவோயிஸ்டுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரத்தை வெளியிட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மாவோயிஸ்டுகளின் பதில் என்ன? ஆட்சியர் அலெக்ஸ் எப்போது விடுவிக்கப்படுவார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.