"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!
விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் தவெக ஒரு மேயர் பதவியில் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விட்ட நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்றே அழைக்கப்படுவார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கிண்டலாக கருத்து தெரிவித்தார்.
விருதுநகர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "விருதுநகர் ரயில் நிலையத்தை மேம்படுத்த அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆய்வு செய்த போதும் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போதும் செல்வம் எம்.எல்.ஏ.வுடன் ஆய்வு மேற்கொண்டேன். இதுவரை ரூ.10 கோடிக்கான பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அனைத்து பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிவடைய வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.
மேலும், பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது தவெகவின் நிலைப்பாடு. மின்வாரிய ஊழல் மற்றும் ஹார்ட் டிஸ்க் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அமைச்சர் கீர்த்தனாவின் வெளிநாட்டு பயணம் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றது குறித்து தவறான பிம்பத்தை உருவாக்க நினைக்கின்றனர்.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் காங்கிரஸ் மீது கூறிய புகார்கள் சில நியாயமற்றதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்று இருப்பதால் எங்களுக்கு மதிப்பு அளிக்கும் கட்சிகளுக்கு நாங்களும் மதிப்பு அளிப்போம்." என்றார்.
மேலும் பேசிய மாணிக்கம் தாகூர், "தி.மு.கவின் அகங்காரம், ஆணவத்திற்கு தான் மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ஆனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் திமுகவினருக்கு இல்லை. 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார். ஆனால் அவருக்கு அரை மீசை நல்லா இருக்காது." எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுக இன்னும் தங்களது தோல்விக்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இன்னும் எட்டு மாதங்களில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 25 மாநகராட்சி மேயர் பதவிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது திமுக வெற்றி பெற்று காட்டட்டும். தைரியம், தில் இருந்தால் எங்களோடு மோதிப் பாருங்கள்" எனப் பேசியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அல்லது உதயநிதிக்கு சவால் விடும் அரசியல் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு சிறிதளவும் இல்லை. தேர்தலில் ஒரு மேயரைக் கூட வெல்ல முடியாது என்று கூறுகிறார். ஆனால் அவர் வரலாற்றை அறியாமல் பேசுகிறார்.
ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். அதில் ஒரு மேயர் பதவியையாவது நீங்கள் வெல்ல முடிந்தால், நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்தச் சவாலை ஏற்க அவர்கள் தயாரா?" என சவால் விட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications