"எனக்கு துரோகி பட்டம் சூட்டவேண்டாம்”.. அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் MSM ஆனந்தன்
சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார். அவர் நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகுவது தொடர்பாக உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆனந்தன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தனது பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக விலகியுள்ளார்.

இது தொடர்பாக எம்.எஸ்.எம். ஆனந்தன் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது என்னுடைய வாழ்வில் நான் கண்ட எல்லா விதமான ஏற்றத்திற்கும் காரணமாக இருந்த இயக்கம். திருப்பூரில் எனக்கு அடையாளம் ஏற்படுத்தி தந்த இயக்கம் அதிமுக எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவர் ஜெயலலிதா.
எளிய தொண்டனாக 1980 ம் ஆண்டில் கழகத்தில் இணைந்த எனக்கு கிளை கழக செயலாளர், மாவட்ட பனியன் சங்க செயலாளர், மாவட்ட பேரவை இணை செயலாளர், நகர கழக செயலாளர், மாவட்ட கழக செயலாளர் என கழகத்தில் அனைத்து உயரிய பொறுப்புகளையும் 2011 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதனை தொடர்ந்து அமைச்சராகவும் உயரிய பதவிகளை தந்து ஜெயலலிதா அழகு பார்த்தார்.
2016ல் எனக்கு ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத போதும் மாவட்ட கழக செயலாளராக 4 தொகுதிகளிலும் வெற்றிக்கு பாடு பட்ட காரணத்தினால் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பொறுப்பிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார். 2016 தேர்தலுக்கு பின்பு 22 மாவட்ட கழக செயலாளர்களை ஜெயலலிதா மாற்றிய போதும் என்னை மாற்றாததே ஜெயலலிதா அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்ததை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மாவட்ட கழக செயலாளராக தலைமை அனுமதித்த பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன். 2020 ல் எந்த காரணமுமின்றி எனது மாவட்ட செயலாளர் பொறுப்பு எடுக்கப்பட்ட போதும் தலைமைக்கு விசுவாசமாக பணியாற்றி வந்தேன். 2021 தேர்தலில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு கழகத்தினரின் மேலான உழைப்பால் வெற்றி அடைந்தேன்.
தொடர்ந்து திருப்பூர் மாநகரில் கட்சி பலமிழந்து வருவதை பல முறை தலைமையிடம் சுட்டி காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடாத நிலையே இருந்தது. 2026 தேர்தலில் போட்டியிட்ட போது தான், திருப்பூரின் கழகத்தின் உண்மை நிலை தெரியவந்தது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் தோல்வி அடைந்த எங்களை போன்ற வேட்பாளர்களுக்கு தலைமை எந்த விதமான ஆறுதல் வார்த்தைகளோ, ஊக்கத்தையோ தரவில்லை.
கண்முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது. அதனை தடுக்க தலைமையும் விரும்புவதில்லை. என்றுமே தலைமையின் மீது சந்தேகம் வராத வரையில் தான், ஒரு இயக்கத்தில் தொண்டன் சிறப்பாக இயங்க முடியும், ஆனால் இன்றைய தலைமையோ இயக்கத்தை பார்க்காமல் தங்களை மட்டுமே காத்து கொள்வதில் அக்கறை காட்டுகிறது.
எதிர் கருத்து சொல்பவர்களை எல்லாம் துரோகி பட்டம் சூட்டி வெளியே அனுப்ப தலைமையுடன் ஒரு சுயநல கூட்டம் இயங்கி கொண்டிருக்கிறது. நான் என்றும் அதிமுகவை என்னுடைய உயிரினும் மேலாக நேசிக்கிறேன். ஆனால் தேனுடன் ஒரு துளி விஷத்தை சேர்த்தாலும் விஷம் தான் என்பது போன்று தலைமையின் விடாப்பிடியான குணமும், சுயநல போக்கு தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.
தண்டனைகளை தான் நான் தருவேன் என்று தலைமை சொன்னால், யார் தான் கருணையையும்,மன்னிப்பையும் தருவார்கள்? தன்னை இகழ்ந்தவர்களையும், தாழ்த்தியவர்களையும் கூட அரவணைத்து ஏற்றத்தை தந்தவர் ஜெயலலிதா. இன்று அனைத்து கட்சிகளும் அதிமுகவை அரவணைக்க தயாராக இருக்கும் போது அதிமுகவின் தலைமை நீக்குவதில் தான் கவனம் செலுத்துகிறது.
நீண்ட யோசனைக்கு பிறகு அதிமுக எனும் மக்கள் தலைவர்கள் வளர்த்த இயக்கத்தில் இருந்து விடை பெறுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்து வந்த கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், என்னுடைய நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். ஜெயலலிதா மறைந்த முதலே தொடர்ந்து துரோகங்களையே நான் சந்தித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு துரோகி பட்டம் சூட்ட யாரும் முற்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications