30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி காலி.. பிரதமர், முதல்வர் என யாருக்கும் விதிவிலக்கு இல்லையாம்!
டெல்லி: அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய 130வது அரசியல் சாசன திருத்த மசோதாவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது அறிக்கையை ஜூலை 17ம் தேதி தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வரும் ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நாடாளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாகக் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது இதர அமைச்சர்களைத் தானாகவே பதவியில் இருந்து நீக்கும் இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

மசோதா
அதே நேரத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்காக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான குறிப்புகளும் இதில் சேர்க்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து இதை விரிவாக ஆராய அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வரும் 17ம் தேதி தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. இந்த குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.
இருப்பினும், ஆளும் கட்சியினரே இந்த குழுவில் அதிகம் இருப்பதால்.. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து விடுவார்கள் என்பதால்.. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பங்கேற்பதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இந்தக் குழுவைப் புறக்கணித்தனர்.
வாதம்
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பாகவே, வெறும் காவலில் வைக்கப்படுவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மக்கள் பிரதிநிதிகளைத் தண்டிப்பது நீதியின் அடிப்படை கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது என்றும் எதிர்க்கட்சிகள் வாதிட்டன. ஆனால், இந்த வாதத்தை ஆளும் தரப்பு ஏற்க மறுக்கிறது.
ஒரு நபர் கைது செய்யப்பட்ட பிறகு, குறைந்தது மூன்று முறையாவது ஜாமீன் கோரி விண்ணப்பிக்க 30 நாட்கள் என்பது போதுமான கால அவகாசமாகும் என்பதால்.. இது நீதியின் கோட்பாட்டை மீறவில்லை என்று ஆளும் தரப்பு சொல்கிறது. இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் விதிகள் வரைவு மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடுமையான குற்றங்கள்
மேலும், அனைத்து வகையான குற்றங்களுக்கும் இந்த சட்டத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக.. குறிப்பிட்ட சில கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே இந்தச் சட்டப்பிரிவுகள் பொருந்தும் வகையில் குற்றங்களின் தன்மையை வகையிலான விதிகளும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தங்களின் மாறுபட்ட கருத்துக்களைத் தனி அறிக்கையாகத் தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் சட்டம்
மத்திய அரசு முன்மொழிந்துள்ள அரசியல் சாசனத்தின் 130வது திருத்தச் சட்டத்தின்படி, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டின்கீழ் அமைச்சராக இருக்கும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால், அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இந்த பதவி நீக்க நடவடிக்கை, பிரதமர் அல்லது முதலமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரால் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து ஒருவர் 31-வது நாளும் காவலில் இருக்கும்பட்சத்தில் தானாகவே அவரது பதவி பறிக்கப்படும் என்றே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications