20 ஆயிரம் பேர் வர்றாங்க.. முன்னாள் அமைச்சரும் தவெகவில் சேரப்போகிறார்.. சி விஜயபாஸ்கர் பூரிப்பு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைய உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இணைய இருப்பதாக சி விஜயபாஸ்கர் பூரிப்புடன் கூறினார். மேலும், புதுக்கோட்டையில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தனது ஆதரவாளர்களை சி. விஜயபாஸ்கர் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளாராம். விஜய் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்காக இன்றே வழி நெடுக தவெக கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதற்காக காத்திருக்கும் சி. விஜயபாஸ்கருக்கு ஒருவழியாக கிரீன் சிக்னலை விஜய் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து நாளை தனது ஆதரவாளர்கள் புடை சூழ தவெகவில் இணைய உள்ளார் சி. விஜயபாஸ்கர்.

இது குறித்து சி விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், "20 ஆயிரம் பேர் நாளை வருகிறார்கள். கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இரண்டும் சேர்த்து 20 ஆயிரம் பேர் வருகிறார்கள். ஸ்ரீரங்கம் முன்னாள் அமைச்சர் வளர்மதியும் நாளை இணைகிறார்" என்றார்.
தவெகவிற்கு படையெடுக்கும் அதிமுகவினர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் முதல் கீழ்மட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் வரை விலகி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களான பெருந்துறை - ஜெயக்குமார், மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, விராலிமலை - டாக்டர் சி. விஜயபாஸ்கர், கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
இவர்களில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்து விட்டனர். இந்த நிலையில் முதல்வரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் நாளை மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காலை 9 மணியளவில் முதல்வர் விஜய் விழா நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதிமுக. முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் தவெகவில் சேருகிறார்கள்.
25 ஆயிரம் பேர்
விஜய் முன்னிலையில் நடைபெறும் இணைப்பு விழாவில் 25 ஆயிரம் பேர் வரை தவெகவில் சேர உள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்றே சென்னைக்கு வந்துள்ளனர். தனியார் விடுதிகளில் தங்கி உள்ள அவர்கள் நாளை காலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இதை தொடர்ந்து மாமல்லபுரம் ஓட்டலில் தீவிர ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் பலத்த போலீஸ் பாது காப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்து விலகுவது ஏன்?
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் இனியும் அந்த கட்சியில் நீடிப்பது தங்களது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கருதுவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தவெகவில் சேர்ந்து வருகிறாா்கள். அதிமுகவில் தற்போது வரை 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் மேலும் பல எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலேயே இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால், அதிமுக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.
இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு
நாளை தவெகவில் இணைய உள்ள சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சி. விஜயபாஸ்கர் மீது குட்கா முறைகேடு புகார் உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கும் நிலுவையில் உள்ளது. அதேபோல எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தவெகவின் கிளீன் இமேஜ் பாதிக்ப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் இதனை முன்வைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.














Click it and Unblock the Notifications