சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக.. விடாப்பிடியாய் எடப்பாடி! மீண்டும் போர்க் கொடி தூக்கிய புள்ளிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 முக்கிய நிர்வாகிகள், தங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்க மறுத்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு தான் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினைகள் இன்னும் முழுமையாக ஓயவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் முக்கிய தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் போர்க் கொடி தூக்கினர்.

AIADMK

இதையடுத்து அவர்களிடம் இருந்த முக்கிய கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் சமாதான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதிருப்தியில் இருந்த தலைவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டனர்.

அதிமுக

இதையடுத்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியும், தங்கமணி, கருப்பணன், கே.பி. அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. ஆனால், இந்த புதிய பொறுப்புகள் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்ற தகவல்கள் அப்போதே வெளியாகின.

எடப்பாடி பழனிசாமி

தாங்கள் முன்பு வகித்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையே மீண்டும் வழங்க வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாக இருந்தது. இந்த சூழ்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் பங்கேற்கவில்லை. இது கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியது. குறிப்பாக, மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாததால் வேலுமணி தரப்பு அதிருப்தியில் இருந்தது.

எஸ்.பி. வேலுமணி

இதற்கிடையில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர். அதில், "புதிதாக வழங்கப்பட்ட பதவிகளை ஏற்க விருப்பமில்லை. நாங்கள் முன்பு வகித்த பொறுப்புகளை வழங்காமல் வேறு பதவிகளை கொடுத்துள்ளீர்கள். எனவே அந்த பொறுப்புகளை ஏற்க முடியாது. இருப்பினும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்ந்து செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தோல்வி

மேலும் அந்தக் கடிதத்தில் , "முன்பு பதவியில் இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பொறுப்புகளை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த தவறான முடிவுகளே கட்சிக்கு தொடர்ந்து தேர்தல் தோல்விகளை ஏற்படுத்தின. 2021, 2024 மற்றும் 2026 தேர்தல்களில் அதிமுக சந்தித்த பின்னடைவுகளுக்கு தலைமை எடுத்த முடிவுகளும் ஒரு காரணம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஜயபாஸ்கர்

மேலும், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் தவறான நிர்வாக முடிவுகளால் பலவீனமடைந்து வருகிறது" என்ற கருத்தும் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. இதற்குமுன் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, தவெகவை நோக்கிச் சென்றனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இதனால் ஏற்கனவே அதிமுகவில் அதிருப்தி அலை மேலும் தீவிரமடைந்துள்ளது.

கொங்கு மண்டலம்

இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கை கட்சிக்குள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு கொண்ட தலைவர்களின் அதிருப்தி, அதிமுகவின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இருப்பினும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க பேச்சுவார்த்தை எடப்பாடி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் போர்க்கொடி

ஒருபுறம் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் அதிமுகவை விட்டு வெளியேறிய தலைவர்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி, "துரோகிகள் வெளியேறுவதால் உண்மையான தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இது அதிருப்தி தலைவர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விட்ட நிலையில் தற்போது முக்கியமான தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி இருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+