“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு!
சென்னை: "கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது. அதிமுக, திமுக இப்போதே கூட்டணி வைக்க தொடங்கிவிட்டது." என அமைச்சரும், தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. தவெக ஆட்சி அமைந்த நிலையில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்தனர். இன்று ஏராளமான மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த விஜயதாரணி இன்று தவெகவில் இணைந்தார்.
தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பேசுகையில், "மக்கள் விரும்பும் கட்சி தவெக. எதிர்காலத்தை நம்பி அனைவரும் தவெகவில் இணைகின்றனர். எந்த குதிரை பேரமும் இல்லை. எடப்பாடி தொகுதியில் தவெக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கினார்.
சூழ்ச்சி செய்துதான் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். ஜெயலலிதா ஆட்சி செய்தபோது அதிமுகவினர் கட்சியில் இருந்து வெளியேறவில்லை. உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் ஏன் எங்களிடம் வருகின்றனர்? உங்கள் மீதான தவறை யோசியுங்கள்.
அதிமுக, திமுக இப்போதே கூட்டணி வைக்க தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெற்றிருக்காது. காங்கிரஸ், விசிக முடிவுகளில் திமுக தலையிட முடியாது.
வாரம் வாரம் படங்களை ரிலீஸ் செய்த ரெட் ஜெயன்ட் நிறுவனம், கடந்த ஒரு மாதமாக என்ன செய்து கொண்டிருக்கிறது? இப்போது நடப்பது அண்ணன் விஜய் ஆட்சி. உங்களால் மிரட்ட முடியாது, உருட்ட முடியாது. சினிமாத்துறை எந்தவித அச்சுறுத்தலும், பயமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவும் தவெகவின் கனவும் ஒன்று. விஜய்யின் மக்கள் செல்வாக்கை பற்றி தெரியவில்லை என்று நேற்று மு.க.ஸ்டாலின் சொல்லிட்டு இருக்காரு.. கேட்டா 50 வருஷ அரசியல் அனுபவம்னு சொல்லிப்பாங்க.. இதையே கண்டுபிடிக்க முடியலைன்னா உதயநிதி என்ன கண்டுபிடிப்பாருன்னு தெரியல.." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications