புழல் சிறையில் மாஜி மந்திரி கே.பி.பி.சாமியை சந்தித்த கனிமொழி
சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியை திமுக எம்பி கனிமொழி சந்தித்துப் பேசினார்.
திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு ஆகியோர் கடந்த 2006ம் ஆண்டு மாயமானயினர். அவர்களை அப்போதைய திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் அடியாட்கள் மூலம் கடத்தி கொலை செய்ததாக இருவரின் மனைவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில கே.பி.பி.சாமி தவிர மற்றவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் இன்று புழல் சிறைக்கு வந்த திமுக எம்பி கனிமொழி, கே.பி.பி.சாமியை சந்தித்துப் பேசினார். சிறைவாசலில் கே.பி.பி.சாமியின் தம்பி சங்கர் மனைவி ஸ்ரீதேவியை சந்தித்த கனிமொழி அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கனிமொழி, அரசியல்ரீதியாக கே.பி.பி.சாமியை சந்தித்தேன். அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் படலம் தொடருகிறது. பெண்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. சமீபத்தில் சங்கர் வீட்டுக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து அவரது மனைவி ஸ்ரீதேவி, அவரது 10ம் வகுப்பு படிக்கும் மகனையும் விசாரணை என்ற பெயரில் போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம்.
திமுக வழக்கறிஞர்களுடன் கருணாநிதி ஆலோசனை:
இந் நிலையில் திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய அதிமுக ஆட்சியில் அடுக்கடுக்காக மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது, அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதுமுள்ள திமுக முன்னணியினரைப் பழி வாங்குவதையே முக்கிய பணியாக கொண்டு பொய் வழக்குகளை புனைந்தும், - போலீஸ் படையை கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிழக்கச் செய்யலாம் என கனவு கண்டு - அதனை நிறைவேற்றி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் கே.பி.சங்கர், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கைது செய்தும், கே.பி.சங்கரின் மனைவியை நள்ளிரவில் வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, அவர் குடும்பத்தையே அழித்து விடும் முயற்சியில் இந்த அதிமுக அரசு ஈடுபட்டு, காவல்துறையை திட்டமிட்டு ஏவிவிட்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற அதிமுக அரசின் போக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்திட திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் வழக்கறிஞர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications