கோஷ்டிப் பூசலை விட்டுட்டு ஒன்னா இருங்க...: காங்கிரசாருக்கு சோனியா அறிவுரை
டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கோஷ்டிப் பூசலை ஓரங்கட்டி வைத்துவிட்டு எதிர்வரும் மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை ஓரணியில் நின்று எதிர்கொள்ள வேண்டும் என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் சோனியா பேசியதாவது:
மக்கள் நம்மைத்தான் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் கோஷ்டிப் பூசலைக் கைவிட்டு ஓரணியில் நிற்க வேண்டும். நமது வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கக் கூடியதும் இதுதான். நாம் ஓரணியில் நின்று நமது உள்ளார்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தினால் அதை தேர்தல் வெற்றிக்குரியதாக மாற்றிவிடலாம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மணிப்பூரில் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினோம். உத்தர்காண்ட்டில் அரசு அமைத்திருக்கிறோம். ஆனால் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல் முடிவுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 22 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நமது வாக்கு வங்கியை அதிகரித்திருக்கிறோம். இதர மாநிலங்களைப் போல நாம் இங்கும் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆளும் கட்சிகளின் முறைகேடுகளை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications