தொடரும் திருவிழா மரணங்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வைகோ வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் நாகூரிலும் கடந்த ஒருவாரத்தில் நடைபெற்ற சமய ஊர்வலங்களில் மின்சாரம் தாக்கி 7 பேரும், தேர்குடை சாய்ந்து மக்கள் கூட்டத்தில் விழுந்ததில் 5 பேரும் உயிர் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சென்னல்குடி கிராமத்தில் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் பல்லக்கை ஊர்வலமாகக் கொண்டு சென்றபோது பொட்டல்பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிர்நீத்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.
சென்னல் குடியைச்சேர்ந்த மாரீஸ்வரன், கார்மேகக் கண்ணன் மற்றும் பொட்டல்பட்டியைச் சேர்ந்த அழகுராஜ் ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்து உள்ளார்கள். அவர்களை இழந்து கண்ணீரில் பரி தவிக்கும் பெற்றோர்கள், உற்றார்-உறவினர்களுக்கு ம.தி. மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்துகளில் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தக்க உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது போல பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்ற இடங்களில் நெரிசல் ஏற்படவும், அதனால் பலர் மயங்கி சரிவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
ஏடுகளில் வெளியாகின்ற திருவிழா படங்களை பார்க்கையில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதைக் காண முடிகிறது.அது போன்ற இடங்களில் ஒருசிலரின் தவறான நடவடிக்கைகளாலும், உற்சாக மிகுதியாலும், எல்லை மீறிய கொண்டாட்டங்களாலும் பெரும் விபரீதங்கள் நேர வாய்ப்பு இருக்கின்றது.
அத்தகைய இடங்களிலும் சமய ஊர்வலங்கள் செல்கின்ற சாலைகளிலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனவா என்பதை காவல் துறையினரும், உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முன்னதாக ஆய்வு செய்ய வேண்டும். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications