மாவோயிஸ்டுகள் துன்புறுத்தவில்லை: சென்னையில் அலெக்ஸ் பால்மேனன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Alex Paul Menon
சென்னை: மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்தபோது, அவர்கள் என்னை துன்புறுத்தவில்லை என்று சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்தி விடுதலை செய்யப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் தனது மனைவியுடன் சென்னை வந்துள்ளார். கிண்டியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

கடவுள் துணையால் எப்படியும் மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீண்டு வருவேன் என்ற திடமான நம்பிக்கையுடன் இருந்தேன். அது அப்படியே நடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. அத்துடன் மத்திய -மாநில அரசுகள், சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக மீடியா, தூதர்கள், சுக்மா மாவட்ட மக்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்கி கொள்கிறேன்.

மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றுவதற்காக என்னைக் கடத்தினர். கடத்தப்பட்ட 13 நாட்களும் வனப்பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு நடத்தி அழைத்து சென்றனர். மற்றபடி கொடுமை எதுவும் செய்யவில்லை.

வனப்பகுதியில் அதிக தூரம் நடந்து பழக்கம் இல்லாததால் கால் பாதம் சற்று கொப்பளங்களாகியும், மூட்டு பகுதியில் சுளுக்கும் ஏற்பட்டது.

சுக்மா மாவட்டத்தின் முதல் கலெக்டராக நான் பணியில் சேர்ந்து நான்கு மாதத்தில் மாவட்டம் முழுவதும் சாலை, போக்குவரத்து, குடிநீர், தெருவிளக்கு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தேன்.

இதனால் அந்த மாவட்ட மக்கள் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நான் கடத்தப்பட்ட போது மாவட்ட மக்களே சோகத்தில் தான் இருந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட போது மாவட்ட மக்கள் கண்ணீர் மல்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நான் தொடர்ந்து சுக்மா மாவட்டத்திலேயே பணி செய்ய விரும்புகிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் சுக்மா மாவட்டத்திலேயே நான் பணி செய்து, வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று என்னை விட அந்த மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

சுக்மா மாவட்ட மக்கள் மிகவும் எளிமையானவர்கள். மக்களை நானே நேரில் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று திண்ணையில் உட்கார்ந்து சந்தித்து குறைகளை கேட்பேன். அன்பாக குடிப்பதற்கு கூழ் தருவார்கள். மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பணி செய்து வந்தேன். நானும் எளிமையாக பழகுவதால் அவர்கள் என்னிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்று கூறியுள்ளார் அலெக்ஸ்.

நீங்கள் கடத்தப்பட்ட போது வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு தூதராக நாசரேத் கல்லூரி முதல்வர் ஜோயல் அங்கு வந்ததாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அலெக்ஸ்,

சத்தீஸ்கர் ந்து முதல்வர் ராமன் சிங்கை, நாசரேத் கல்லூரி முதல்வர் ஜோயல் சந்தித்தார். அரசுத் தூதராக வனப்பகுதிக்கு சென்று மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மாநில அரசிடம் அனுமதி கேட்டார். ஆனால் அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தமிழகம் திரும்பினார். அவர் தூதரும் கிடையாது, சத்தீஸ்கரில் அவர் என்னை சந்திக்கவும் இல்லை. அவர் கூறுவது போல் மாவோயிஸ்டுகள் என்னை துன்புறுத்தவும் இல்லை. அது தவறான தகவலாகும்.

எனக்கு ஜோயலைத் தெரியாது. என்னுடைய அப்பா கல்வி துறையில் பணியாற்றிய போது அவருக்கு தான் தெரியும். ஆர்வக் கோளாறு காரணமாக என்னை மாவோயிஸ்டுகளிடம் இருந்து மீட்க அரசு தூதராக செயல்பட ஜோயல் ஆசைப்பட்டார். மற்றபடி அவரிடம் நான் எதுவும் கூறவும் இல்லை. எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார் அலெக்ஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sukma District Collector Alex Paul Menon and his wife Asha came home to Chennai on Saturday. While speaking to a journist, Menon said he was not tortured by Naxals while he was in captivity
Please Wait while comments are loading...