ஆளை விழுங்கும் திமிங்கலம்தான்... ஆனாலும் ஜெகனுக்கே சலாம்!

தனக்கு முதல்வர் பதவியைத் தர மறுத்த காங்கிரஸை அடியோடு சாய்த்து வீழ்த்துவது என்பதே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒரே அஜென்டா என்கிறார்கள். இதனால்தான் ஜெகனை வீழ்த்த காங்கிரஸ் முடிவு செய்ததாம்.
அப்படியாப்பட்ட பலசாலியா ஜெகன்?
ஜெகன் மோகன் ரெட்டிக்கென்று சொந்தமாக எந்தப் பலமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது அப்பா ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது அதைப் பயன்படுத்தி, அவரது செல்வாக்கு, அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை ஏற்படுத்தி விட்டார் ஜெகன்.
அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் என சகல மட்டத்திலும் ராஜசேகர ரெட்டியின் அபிமானிகள் நிறையவே உண்டு. அவர்கள் அத்தனை பேருமே ஜெகனுக்கும் ஆதரவாளர்கள்தான். இவர்கள் கொடுக்கும் தெம்பில்தான் ஜெகன் தைரியமாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.
சரி, ஜெகனின் இலக்கு என்ன?
2014ம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்குத் தேர்தல் வரப் போகிறது. இதில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே ஜெகன் மோகன் ரெட்டியின் இலக்கு என்கிறார்கள். அப்போதைய தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால்தான் காங்கிரஸுக்கு பெரும் குடைச்சலைக் கொடுக்க முடியும், தன் வழிக்குக் கொண்டு வர முடியும் என கணக்குப் போட்டு செயல்படுகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
தற்போது ஆந்திர சட்டசபையில் அவருக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், கணிசமான எம்.பிக்கள் ஜெகன் மோகன் ஆதரவாளர்கள்தான்.
ராஜசேகர ரெட்டி தேர்தலில் சீட் கொடுத்தபோதே கில்லாடியாக செயல்பட்டுள்ளார். தனது உறவினர்கள், நெருக்கமானவர்கள், விசுவாசிகள் என பார்த்துப் பார்த்துத்தான் அவர் சீட் கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் அனைவரும் ஜெகனுக்கும் ஆதரவாக உள்ளனர்.
அதேபோல தொழிலதிபர்கள் பலரையும் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தை உயிருடன் இருந்தபோதே விவரமாக வளைத்துப் போட்டு வைத்துள்ளார். அதிகாரிகள் மட்டத்திலும் தனக்கு ஆதரவானவர்களை போட்டு வைத்திருந்தார்.
இடைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் டமால் டுமீல்!
ஆந்திராவில் ஜூன் 12ம் தேதி 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் வெல்ல ஜெகன் மோகன் ரெட்டி தீவிரமாக உள்ளார்.
கருத்துக் கணிப்புகளிலும் கூட 14 சட்டசபைத் தொகுதிகளில் ஜெகன் கட்சி வெல்லும் என கூறப்பட்டுள்ளதாம். இந்த தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் முழு அளவில் வெளியேறுவார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட ஆட்சியைக் கவிழ்க்கவும் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் காங்கிரஸ் மேலிடம் சிபிஐ மூலம் துரிதமான நடவடிக்கையில் குதித்ததாக கூறப்படுகிறது.
இவ்வளவு ஆதரவு இருக்கே, அவ்வளவு நல்லவரா ஜெகன்?
அப்படியெல்லாம் அவசரப்பட்டு சொல்ல முடியாது என்பதே ஆந்திராவில் அடிபடும் பேச்சின் சாராம்சம். எதிரிகளையும், எதிர்ப்புகளையும் சகித்துக் கொள்ள முடியாதவர் ஜெகன் என்கிறார்கள்.
தான் சொல்வதே சரி, தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராம் ஜெகன். தான் சொல்லும் கருத்தை மறுத்துப் பேசுவதையும் அவர் விரும்ப மாட்டாராம். சர்வாதிகாரமான போக்கைக் கொண்டவர் ஜெகன் என்கிறார்கள்.
ஒரு முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டியை நினைத்துப் பார்க்க முடியாது. அதற்குப் பொருத்தமானவரல்ல அவர் என்பதும் பரவலாக நிலவும் கருத்தாக உள்ளது. காரணம், எதிரிகளை சர்வாதிகாரப் போக்குடன், இரும்புக் கரம் கொண்டு அவர் அடக்கி விடுவார். நில மோசடிகள் அதிகரிக்கும் என்றும் அவரது எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருந்தும் ஆதரவு ஏன்...?
இப்படி கருத்துக்கள் இருந்தும் கூட ஜெகன் மோகன் ரெட்டியை காங்கிரஸில் பலரும் ஆதரிப்பதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் பெரும்பாலும் ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள் அல்லது சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
ரெட்டி சமூகத்தினரும், கிறிஸ்தவ தலித் சமுதாயத்தினரும் ராஜசேகர ரெட்டி மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர். அவர்கள் ஜெகனை முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள். கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் ஜெகனுக்கு நல்ல ஆதரவு உண்டு. அதேசமயம், தெலுங்கானாவில் சுத்தமாக கிடையாது.
அரசியல் என்பதே கணக்குத்தான். எனவே ஜெகன் மோகன் ரெட்டியும், இப்படிப்பட்ட கணக்குகளை மனதில் வைத்துத்தான் தைரியமாக அரசியல் நடத்தி வருகிறார். அவர் தலையெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் காங்கிரஸும் தனிக் கணக்கைப் போட்டு சிபிஐ உள்ளிட்ட சமாச்சாரங்களை ஏவி விட்டு பிரேக் போட பார்க்கிறது.
இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார், வீழப் போவது யார் என்பது 2014 தேர்தலிலோ அல்லது அதற்கு முன்பாகவோ கூடத் தெரியலாம்...












Click it and Unblock the Notifications