பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகும் விஜய்காந்த்!

பெட்ரோல் விலையை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னையில் 5 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருச்சியில் 1ம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்:
அதே போல பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஜூன் 1ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என்றும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் மீது மத்திய அரசு சுமார் 8 ரூபாய் அளவுக்கு கூடுதலாக விலையை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இந்த விலை உயர்வை கண்டித்தும் கூட மத்திய அரசு அதை குறைக்க தயாராக இல்லை.
இந்த விலை உயர்வினால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களின் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. ஒரு பக்கத்தில் விலைவாசி உயர்வும், இன்றியமையா தேவைகளான பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் மறு புறத்தில் இந்த செலவுகளை சரிக்கட்ட எத்தகைய கூடுதல் வருவாய்க்கும் வழியில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே வேலை செய்து பெற்ற வருமானத்தைக் கூட மின்வெட்டு காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால் வருமானத்தை பெற வழியில்லை. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அன்றாட செலவுகளையே சரிக்கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வு போதாது என்று இன்னும் டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை போன்றவற்றின் விலைகளும் உயரும் என்று சொல்லப்படுகிறது. உரங்களின் விலையும் மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
இவற்றின் விளைவாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் எந்த வருமானமும் பெற முடியாமல், வாழ்க்கைச் செலவையும் சந்திக்க முடியாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு நன்மை செய்வதாகக் கூறி வாக்குகளை பெற்றுத்தான் மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. கஷ்டங்களை அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பாதிக்கு மேல் மத்திய, மாநில அரசுகள் வரி விதித்து வருமானத்தை பெறுகின்றன.
மத்திய, மாநில அரசுகள் தங்களது வரி விதிப்பை குறைத்து, பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க வழி வகுக்க வேண்டும். மத்திய அரசும் தனது வரி விதிப்பில் இருந்து குறைக்க வழி வகுக்க வேண்டும். மத்திய அரசும், தனது வரி விதிப்பில் இருந்து குறைக்க மறுக்கிறது.
இங்குள்ள மாநில அரசும், கோவா, டெல்லி போன்ற மாநிலங்களில் வரியைக் குறைத்துள்ளதை போல தமிழ்நாட்டில் வரியை குறைக்கவில்லை. மாறாக அவர்களும் சேர்ந்து மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். மத்திய அரசின் சார்பில் மாநிலங்கள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்கின்றனர். மாநில அரசோ, மத்திய அரசின் வரியை குறைக்க வேண்டும் என்கின்றனர். இறுதியில் இரண்டு அரசுகளுமே வரிகளை குறைக்காமல் மக்களின் தலையில்தான் வரிச்சுமையை ஏற்றுகின்றனர்.
மத்திய அரசுக்கு அடைகிற லாபத்தில்தான் நஷ்டமே ஒழிய வேறு வகையில் இழப்பில்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் போக்கை கண்டிக்கும் வகையில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி காலை 11 மணியளவில் திருச்சியில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொது மக்களும், தாய்மார்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
புதுவை அதிமுக ஆர்ப்பாட்டம்:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதாக தெரிவித்த புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான அன்பழகன் இதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications