பாஜக ஊழலே செய்யவில்லையா? அன்னா குழுவிற்கு காங்கிரஸ் கேள்வி
டெல்லி: ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பும் அன்னா ஹசாரே குழுவினர் பாஜாகவினருக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மந்திரிசபையில் உள்ளவர்கள் சிலர் மீது அன்னா ஹசாரே குழுவினர் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், :
ஊழலுக்கு எதிராக போரடுவதாக கூறிக்கொள்ளும் அன்னா ஹசாரே குழுவினர் பலரது பெயர்களை வெளியிட்டு அவர்கள் ஊழல் புரிந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் பாரதீய ஜனதா கட்சியினர் ஒருவரது பெயரைக்கூட வெளியிடவில்லை.
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களின் ஊழலை அவர்களால் காண முடியவில்லையா?
கறுப்பு பணத்துக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் ஆகஸ்டு வரை போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக அன்னா ஹசாரே குழுவினர் கூறுகின்றனரே என கேட்கிறீர்கள். மக்கள் விரும்பியதை செய்வதற்கு அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை அளித்துள்ளது என்றார்.
அன்னா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் குழுவினரின் போராட்டம் பற்றி லோக்ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், அன்னா ஹசாரே குழுவினரின் போராட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மேலும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராம்தேவும், அன்னா ஹசாரேயும் போட்டியிட வேண்டும். பரிசுத்தமானவர்கள் என்று தங்களை கூறிக் கொண்டிருக்கிற அவர்களை தேர்ந்தெடுக்க செய்யட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications