இந்திய கடற்படைக்கான தனி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை: இந்திய கடற்படைக்கு என பிரத்யோகமாக ஒரு ஜியோ ஸ்டேஷனரி செயற்கை கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்படுகிறது. சாட்டிலைட் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு என்றே புதிய தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளின் ராணுவ பயன்பாட்டிற்காக பிரத்யோகமாக பல சாட்டிலைட்டுகள் உள்ளன. இந்திய ராணுவத்துக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு சாட்டிலைட்டுகளை விண்ணி்ல் செலுத்தியுள்ளது. இருப்பினும் முழுக்க முழுக்க ராணுவ பயன்பாட்டிற்கே சாட்டிலைட் ஏவப்பட்டதில்லை. இந்த குறையை போக்கும் வகையில் வெகு விரைவில் இந்திய கடற்படைக்கு என தனியாக ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜியோ ஸ்டேஷனரி வகையை சேர்ந்த இந்த சாட்டிலைட் முழுமையாக தயாரிக்கப்பட்டு விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் 1000 நாட்டிகல் மைல் பரப்பளவுக்கு இந்த சாட்டிலைட் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும். இந்திய கடற்படை கப்பல்கள் நடமாட்டம் மற்றும் எதிரிநாட்டு கப்பல்களின் நடமாட்டத்தையும் இந்த சாட்டிலைட் கண்காணிக்கும். இதற்காக இந்திய கடற்படையில் அசிஸ்டெண்ட் சீப் ஆப் நேவல் ஸ்டாப்(தகவல் தொடர்பு, விண்வெளி, நெட்வார்க் ஆபரேசன்) என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதவியில் தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் யுத்த முறைகளில் வல்லுனரான ரியர் அட்மிரல் கிஷன் கே.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications