குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் பிரணாப் முகர்ஜி VS அப்துல் கலாம் இடையே போட்டி உருவாகிறது?

டெல்லியில் மமதா பானர்ஜி, முலாயம்சிங் ஆகிய இருவரும் அப்துல்கலாம், மன்மோகன்சிங் மற்றும் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரை பரிந்துரைத்ததில் இருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான ஆடுகளம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது எனலாம்.
பிரதமராக உள்ள மன்மோகன்சிங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் கோர்த்துவிடுவதா? மன்மோகன்சிங்கை மாற்றச் சொல்லுவதா? என்ற கடுப்பில் இருக்கிறது காங்கிரஸ். சோம்நாத் சட்டர்ஜியை இழுத்துவிடுவதன் மூலம் இடதுசாரிகளுக்கு செக் வைத்த மாதிரி இருக்கும் என்றும் மமதா கருதி இருக்கலாம். ஆனால் அப்துல் கலாமை முன்னிறுத்துவதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைப் பெறலாம் என்றும் மமதா கணக்குப் போட்டிருக்கலாம். முலாயம்சிங் மதில்மேல் பூனையாகத்தான் இருப்பார்.
மமதாவின் கணக்கு பலிக்கிறது என்று சொல்லும் வகையில்தான் அடுத்தடுத்த நிகழ்வுகளும் அமைந்து வருகின்றன. அனேகமாக பாரதிய ஜனதா கூட்டணியானது அப்துல் கலாமையே முன்னிறுத்த வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. சென்னையில் இன்று பேசிய பாஜக தலைவர் அத்வானி, அப்துல்கலாம் உள்ளிட்ட பலரது பெயரை பரிசீலித்ததாகத் தெரிவித்திருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சியான சிரோன்மணி அகாலிதளமும் கூட அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. நாளை நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் அப்துல்கலாமை நிறுத்தலாம் என முடிவு செய்தால் அனேகமாக ஜெயலலிதா மற்றும் நவீன்பட்நாயக்கின் ஆதரவை அக்கூட்டணி கோருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அப்துல்கலாம் என்று மமதாவும் முலாயம்சிங்கும் முன்வைத்த தேர்வுக்கு அனேகமாக அமோக ஆதரவு கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனை சமன் செய்யும் வகையில் அல்லது இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னிறுத்தப் போகின்ற பிரணாப் முகர்ஜிக்கு இடதுசாரிகளும் பகுஜன்சமாஜூம் கை கொடுக்க நேரிடலாம். கடைசி கட்டத்தில் முலாயம்சிங்கும் கூட காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைக்கலாம்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெற்றி பெற தேவையான வாக்குகள்: 5,49,442
தற்போதைய நிலவரப்படி பிரணாப் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவு எப்படி இருக்கும்?
காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம, ராஷ்டிரிய லோக்தள் ஆகியவை நிச்சயம் பிரணாப்பை ஆதரிக்கும் என்பதால் பிரணாப்புக்கு உறுதியாகக் கிடைக்கக் கூடிய வாக்குககள் 4,13,559 (37.6 விழுக்காடு)
கலாம் நிறுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு ஆதரவு எப்படி இருக்கும்?
பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம், தெலுங்குதேசம், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து ஆதரித்தால் 4,62,896 வாக்குகள் கிடைக்கலாம். (42 விழுக்காடு)
சங்மாவை அதிமுக முன்னிறுத்தினாலும் கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதரித்தாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படலாம்.
கலாம் நிறுத்தப்பட்டால் திமுக என்ன செய்யும்?
ஒருவேளைகலாம் அப்துல்கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரை முன்னிறுத்தலாம் என திமுகவின் "வாய்ஸ்" ஆக கருதப்படுகிற திராவிடர் கழகம் கூறியிருந்தது. அதை கருணாநிதியும் ஆமோதித்திருந்தையும் கவனத்தில் கொண்டால் கலாமுக்கான வாக்குகளின் எண்ணிக்கை இன்னமும் கூடும்.
இடதுசாரிக் கட்சிகளின் வாக்குகள் அனேகமாக பிரணாப்புக்கே செல்ல வாய்ப்பிருக்கிறது. தம்மை குடியரசுத் தலைவராக வரவிடக் கூடாது என்று கங்கணம் கட்டும் மமதாவின் சபதத்தை முறியடிக்க இப்போதே பிரணாப் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு சென்றாகிவிட்டார். மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மூத்த இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ்கட்சி மற்றும் இதர கட்சிகள் ஆகியவை வசம் 20 விழுக்காடு வாக்குகள் இருக்கின்றன. பகுஜன் சமாஜ்கட்சி எப்படியும் காங்கிரசைத்தான் ஆதரிக்கும் என்ற நிலையில் பிரணாப் வெல்வது எளிதாகிவிடும்.
ஆக குடியரசுத் தலைவர் தேர்தலின் முதல் களமான் பிரணாப் முகர்ஜி, அப்துல்கலாம் என்ற இரண்டு முகங்களை மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனம்.












Click it and Unblock the Notifications