ஸ்ரீரங்கம் தீ விபத்து: மண்டப அதிபருக்கு 2 ஆண்டு சிறை, பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50,000
திருச்சி: இந்தியாவையே உலுக்கிய ஸ்ரீரங்கம் தீ விபத்து வழக்கில் மண்டப அதிபருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் இ.வி. ஸ்ரீனிவாச்சாரி சாலையில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் நியூ இண்டியா அஸ்யுரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஆர். குருராஜன் (40) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை எச்.ஜெயஸ்ரீ (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது அங்கு இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் குழுமியிருந்தனர்.
மண்டபத்தில் இடம் பத்தாததால் மொட்டை மாடியில் தென்னங்கீற்றுப் பந்தல் அமைக்கப்பட்டு அதன் கீழ் மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மணமகன் குருராஜன், அவரது பெற்றோர், தாத்தா மற்றும் உறவினர்கள் உட்பட 64 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். மணமகள் ஜெயஸ்ரீ உள்பட 33 பேர் காயம் அடைந்தனர்.
இந்தியாவையே உலுக்கிய இந்த கோர தீவிபத்து பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. அப்போதைய திருச்சி மாவட்ட கலெக்டர் கே.மணிவாசகம், திருச்சி சரக காவல் துறை தலைவர் எஸ்.ஜார்ஜ், துணைத் தலைவர் சுனில் குமார் சிங் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பின்பு மண்டப மேலாளர் எஸ். சடகோபன், வீடியோ லைட் பாய் ஆர்.பாலாஜி, எலக்ட்ரீசியன் கே.முருகேசன், பந்தல் அமைப்பாளர் எம்.செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வழங்கினார்.
நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான தர்மராஜுக்கு 1 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ. 9,700 அபராதமும், இரண்டாவது குற்றவாளியான பாலாஜிக்கு 1 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ. 10,700 அபராதமும், நான்காவது குற்றவாளியான திருமண மண்டப அதிபர் இராமசாமிக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.1,400 ரூபாய் அபராதமும், மேலும் அவர் விபத்தில் இறந்த 64 குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000ம், தீக்காயம் அடைந்த 33 பேருக்கு தலா ரூ.10,000ம் இழப்பீடு வழங்க வேண்டும்.
5வது குற்றவாளியான சடகோபனுக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.11,100 அபராதமும், 6வது குற்றவாளியான செல்வம் என்ற பெரியசாமிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் ரூ.11,000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் இது போன்ற மோசமான தீவிபத்தோ அல்லது மற்ற நிகழ்வுகளோ நடக்க கூடாது என்பதற்காக திருச்சி மாநகராடசிக்கு உட்பட்ட அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்கள் ஆகியவற்றை திறமை வாய்ந்த நிபுணர்களை கொண்டு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து 3 மாத காலத்திற்குள்ளாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் 3வது குற்றவாளியான பந்தல் அமைப்பாளர் செல்வம் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications