சதானந்த கவுடாவுக்கு நெருக்கடி முற்றுகிறது- ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர் 8 அமைச்சர்கள்!
பெங்களூர் : கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை நீக்கக் கோரி எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 8 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து சதானந்த கெளடாவை நீக்க வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக முன்னாள் முதல்வர் எதியூரப்பா அணியினர் கோரி வந்தனர். இதற்கு பா.ஜ.க. மேலிடம் செவிசாய்க்கவில்லை, மேலும் சட்டப் பேரவை பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் சதானந்த கௌடா ஏற்கவில்லை. இதையடுத்து தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் முடிவு செய்தனர்.
எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் ஆலோசனை நடத்தினர். பின்னர் டாலர்ஸ் காலனியில் உள்ள முன்னாள் முதல்வர் எதியூராப்பா வீட்டில் அடுத்த கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ரேணுகாச்சார்யா, சி.எம்.உதாசி, வி.சோமண்ணா, முருகேஷ் நிரானி, ரேவுநாயக் பெலமகி, உமேஷ்கத்தி ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை சதானந்த கவுடாவிம் நேரில் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.எம்.உதாசி, பசவராஜ் பொம்மை ஆகியோர் கூறுகையில்,: முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதுபற்றி விவாதிக்க சட்டப் பேரவை பாஜக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டோம். இதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. இதனால், பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. எங்கள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாததால் வேதனையடைந்த நாங்கள் முதல்வரிடம் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ளோம் என்றார் அவர்.
மேலும் 2 அமைச்சர்களும் ராஜினாமா?
ஷோபா கரந்தலஜேவின் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த போது, அவர் நேரில் கொடுத்தால் ஏற்பதாக முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார். ராஜு கவுடா வெளியூரில் இருந்து திரும்பியதும் ராஜிநாமா கடிதத்தை கொடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
60 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா?
இதனிடையே எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ. பி.பி.ஹரீஷ் கூறுகையில், 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜக எம்.எல்.ஏ.க்களை சதானந்த கவுடா தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் ராஜினாமா முதல்கட்ட நடவடிக்கை. எங்கள் கோரிக்கைக்கு மேலிடம் செவிசாய்க்காவிட்டால், எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம். எதியூரப்பாவுக்கு ஆதரவாக 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications