For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. நடத்திய இலவச திருமணத்தில் திருமணமானவர்களுக்கும் திருமணம்; பழி அதிகாரிகள் மீது- கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Free Marriage
சென்னை: ஆட்சியாளர்களின் தவறுக்கு அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற 1,006 இலவச திருமண நிகழ்ச்சியில் ஏற்கெனவே திருமணமானவர்களும் பங்கேற்றதை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இலவச திருமணங்களில் பங்கேற்ற மணமக்களை அமைச்சர்களும், ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும்தான் தேர்வு செய்தார்கள்.

ஆனால், பிரச்சனை என்றதும் அறநிலையத் துறை ஆணையர் மீது பழிபோட்டு அவருக்கு வேறு பணி வழங்காமல் மாறுதல் செய்திருக்கிறார்கள். மேலும் நான்கைந்து அதிகாரிகளை தாற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.

எவ்வித பரிந்துரைக்கும் இடமின்றி அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாலாஜியை மாறுதல் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளுக்கு அதிகாரிகள்தான் பலி கடா ஆக்கப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்களைக் கண்டித்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கட்சி கவுன்சிலர்களே கேட்கிறார்கள்.

ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை இன்னமும் திறக்கப்படவில்லை. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

புதன்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வமும்,எழுச்சியும் தொண்டர்களிடம் பெருக்கெடுத்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், தங்கள் மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் இடங்கள், தலைமை, முன்னிலை வகிப்போர் விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல. ஒவ்வொரு போராட்டத்திலும் நான் கலந்து கொண்டு, நான் வழியனுப்பப்பட்டிருக்கிறனே தவிர, வழியனுப்புவோனாக என்றைக்கும் இருந்தது இல்லை.சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்பவனாக நான் அறிவிக்கப்படா விட்டாலும், தாம்பரம் கூட்டத்தில் நான் கூறியதைப் போல இந்த வரிசையில் நின்று, அது தடைப்பட்டால் அடுத்த வரிசை, அந்த வரிசையும் தடைப்பட்டால் கடைசி வரிசை, அந்த வரிசையிலே கருணாநிதியும் இருப்பான். முதல் வரிசையில் சிறையில் நான் இல்லாவிட்டாலும், என்னுடைய உள்ளமும், உணர்வும் சிறைக்குள்ளே சிறகடித்து உலவிக் கொண்டேயிருக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், நான் திறந்து வைத்த ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. அதற்கு கோர்ட்டு தடை விதித்த நிலையில், நூலகத்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக முன் பணம் பெற்றிருந்தால், அதனைத் திரும்ப கொடுத்து விட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நூலகத்தின் பெருமையை உணர்ந்து கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப் பிரிதிபலிக்கும் வகையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக ஆட்சியில் என்னால் அமைக்கப்பட்டது என்பதற்காக நாசப்படுத்த விரும்புகிறார்கள். இந்தச் செயலை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. இன்றைய தீர்ப்பு தமிழக அரசுக்கு ஒரு சாட்டையடி ஆகும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரை முன் மொழிந்ததை எனது பணியாகக் கருதினேன். ஆனால், குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்பாளரை முன்மொழிவது என் வேலையல்ல எனக் கருதுகிறேன்.

சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை.

2006 முதல் 2008 வரை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை பிரதமர் தொடர்பு கொள்ள முடியவில்லை என 2ஜி அலைக்கற்றை வழக்கில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார் கருணாநிதி.

English summary
DMK chief M Karunanidhi criticized the state government for permitting a wedding reception to be held in the Anna Centenary Library Auditorium. Reacting to the Madras high court order restraining the government from giving the premises for such use, Karunanidhi said, "The judges know the importance of the library and have issued a stay order. It reflects the opinion of crores of people." He also alleged that the library was left uncared-for deliberately to encourage its misuse. "The court's intervention is a welcome relief," he told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X