தூத்துக்குடியில் அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட ஓட்டப்பிடாரம் மக்கள்: பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையனை ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் முற்றுகையி்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தனது தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்டு அளிக்கப்பட்ட 20,000 மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஆஷிஷ் குமாரை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடிக்கு ஆய்வுக்கு வரும் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தங்களது கோரிக்கைகள் மறறும் புகார் மனுக்களை அளிக்குமாறு தொகுதி மக்களிடம் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வருவாய்த் துறை ஆய்வுக் கூட்டத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் வருவதை அறிந்த ஓட்டப்பிராடம தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
முதலில் அங்கு வந்த டாக்டர் கிருஷ்ணசாமியிடம் அவர்கள் மனுக்களை அளித்தனர். அமைச்சர் வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு மனுக்களை கொடுக்குமாறு தெரிவித்துவிட்டு பொதுமக்களுடன் சேர்ந்து கிருஷ்ணசாமியும் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த அமைச்சர் செங்கோட்டையன் காரில் இருந்து இறங்கியவுடன் அங்கு கூடியிருந்த மக்கள் அவரை முற்றுகையிட்டு தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென மனு அளித்தனர். இதனால் அமைச்சரால் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மிகவும் சிரமப்பட்டு மக்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரை பத்திரமாக கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
