பஞ்சாப் மாநிலத்தில் நீடிக்கும் பிரிவினைவாத அச்சுறுத்தல்: ப.சிதம்பரம் எச்சரிக்கை
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் போராளிக் குழுக்களால் தீவிரவாத அச்சுறுத்தல் இன்னமும் இருக்கிறது என்பதால் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
பஞாப் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை. மாநிலத்தில் மீண்டும் பிரிவினைவாதத்தை தலைதூக்க சில போராளிக் குழுக்கள் முயற்சிக்கின்றன. இந்த விஷயத்தில் உளவுத்துறை எச்சரிக்கையாக இருந்து வருகிறது.
பஞ்சாப் மாநில அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறது. இந்த மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 47 தீவிரவாதிகளும் 2011-ம் ஆண்டில் 9 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். 2011-ல் அம்பாலாவில் 6 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பிடிபட்டது. இது தொடர்பாக பஞ்சாப் தனிநாடு கோரும் பப்பர் கல்சா இயக்கத்தினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் 1980களிலும் 90களிலும் இருந்தது போல் பிரிவினைவாத குழுக்களின் செயல்பாடு இப்போது இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதம் முற்றாகவே ஒழிக்கப்பட்டுவிட்டது.
தனிநாடு கோரிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக 1984-ம் ஆண்டு ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்து நடத்திய ஆப்பரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையின் போது நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கான நினைவிடம் பொற்கோவிலில் அமைக்கப்படுவது பற்றி இருவேறு வித கருத்துகள் சொல்லப்படுகின்றன. இது தொடர்பாக நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்.
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானா ஆயுதக் குழுக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மாவோயிஸ்டுகளால் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரத்தில் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றார் ப.சிதம்பரம்.


Click it and Unblock the Notifications
