For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் துபாயில் பலி

By Mathi
Google Oneindia Tamil News

Sekar
துபாய்: துபாயில் அமெரிக்க கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு தமிழக மீனவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.

பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு முகாமிட்டுள்ளது. அந்த படைக்கு எரிபொருள் விநியோகத்துக்காக யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக்' என்ற அமெரிக்க எரிபொருள் கப்பல் துபாய் வழியாக சென்று கொண்டிருந்தது. துபாயின் ஜபேல் அலி துறைமுகம் அருகே அக்கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அந்த கப்பலை நோக்கி 30 அடி நீளமுள்ள ஒரு சிறிய படகு விரைந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் படகு தீவிரவாதிகளின் படகாக இருக்குமோ என்று அச்சப்பட்ட அமெரிக்க மாலுமிகள் படகின் திசையை மாற்றுமாறு எச்சரித்திருக்கின்றனர். ஆனால் படகில் சென்று கொண்டிருந்த மீனவர்களுக்கு அது தெரியவில்லை. இதனால் திடீரென அமெரிக்க படகில் இருந்தவர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ஆனாலும் மீனவர் படகு தங்களைத்தான் தாக்க வருகிறது என்று கருதி சராமரியாக படகை நோக்கி சுடத் தொடங்கினர்.

இதில் படகில் இருந்த ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அப்படகு ஜபேல் அலி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

படகில் இருந்தவர்கள் ராமேஸ்வரம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் துபாய் நிறுவனத்துக்காக கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலியானவர் பெயர் சேகர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் தோப்புவலசை களிமண்குண்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தவர்கள்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

மத்திய அரசு விளக்கம்:

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜூலை 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி, துபாய், ஜபேல் அலி துறைமுகம் அருகே மாலை 3 மணியளவில் மீன்பிடி படகு ஒன்றின் மீது தனது நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இதில் ஒரு இந்திய மீனவர் கொல்லப்பட்டார். 3 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்திய மீனவர் உயிரிழந்ததும், 3 பேர் காயமடைந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம், அமெரிக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அதேபோல அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்த துயரச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவது தொடர்பாக முழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அங்குள்ள தற்காலிக தூதர் ஜபேல் அலி வழங்கி வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவல், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயைத் தொடர்பு கொண்டு மீனவர் பலியானதற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். இதுதொடர்பாக அமெரிக்க அரசு முழு அளவிலான விசாரணையை நடத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இந்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A fisherman from Tamil Nadu was killed and three were injured when they were shot at by a US Navy off the coast of Dubai on Monday. Reports from the UAE said the fishermen were shot when they did not heed warnings and approached the naval ship in their small boat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X