சேலம் அருகே எருதாட்டத்துக்கு அனுமதி மறுப்பால் கலவரம் - போலீசார் தடியடி- கண்ணீர்புகை குண்டு வீச்சு
சேலம்: சேலம் அருகே எருதாட்டம் நடத்த அனுமதி மறுத்ததால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் உள்ளது மூங்கில் குத்து முனியப்பன்கோவில். ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் விழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வர். அனைத்து கிராமங்கள் சார்பில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெறும். எருதாட்டம் நிகழ்ச்சிக்காக 18 கிராமங்களில் இருந்தும் நேற்று முன்தினம் மாலையே மாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எருதாட்டம் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதில் அதிருப்தியடைந்த கிராம மக்கள் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வந்த அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தனர். ஆனால் கிராம மக்கள் சமாதானம் அடையவில்லை.
இதனால் நேற்று 2-வது நாள் எருதாட்டம் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
எருதாட்டம் நிகழ்சி தொடங்கும்போது போலீசார் மீண்டும் தடுத்தனர். இதனால் காவ்லதுறையினருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மீண்டும் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டடது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முற்றிலுமாக போக்குவரத்து தடுப்புகளை அமைத்தனர். போக்குவரத்தை தடுத்துக் கொண்டிருந்த கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதில் கோபமடைந்த கிராம மக்கள் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கினர். போலீசாரும் பதிலடியாக கற்களை வீசினர். ஒரு கட்டத்தில் கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. சம்பவம் நிகழ்ந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. ஒருவழியாக கலவரம் ஓயந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 130 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications