ரயில் விபத்து: டெல்லிக்கு பயிற்சி முடித்து திரும்பிய நெல்லை கூட்டுறவு அதிகாரி பலி
சங்கரன்கோவில்: ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சங்கரன்கோவில் கூட்டுறவு சங்க அதிகாரி பலியானார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் எழில் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அவர் சங்கரன்கோவிலில் உள்ள ஓ 965 கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துணை பதிவாளராக பணியாற்றி வந்தார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 12 கூட்டுறவு சங்க தனி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டப் பயிற்சி டெல்லியில் ஒரு வாரம் நடந்தது. இதில் பங்கேற்க அவர் விமானம் மூலம் டெல்லி சென்றார். பயிற்சி முடிந்ததும் அவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். அவருடன் தென்காசியைச் சேர்ந்த துணை பதிவாளர் உசேன் என்பவரும் பயணம் செய்தார்.
நேற்று அதிகாலை அவர்கள் பயணம் செய்த எஸ் 11 பெட்டியில் தீ பிடித்தது. இதில் ஜெகநாதன் தீயில் கருகி பலியானார். இறந்த ஜெகநாதனுக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், சசிகலா, பாரதி என்ற மகள்களும், கவுதம்ராஜ் என்ற மகனும் உள்ளனர். இதில் கவுதம்ராஜ் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். உசேன் அதிகாலை 4 மணிக்கு தொழுவதற்கு முகம் கழுவுவதற்காக சென்றதால் அவர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உசேனின் சொந்த ஊர் புளியங்குடி ஆகும். செங்கோட்டை கூட்டுறவு சார் பதிவாளரான அவர் கள அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.
ஜெகநாதன் பலியானது குறித்து உறுதி செய்வதற்காக சென்னையில் உள்ள அவரது தம்பி பாலமுருகனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று தெரிவித்த அடையாளங்களை வைத்து ஜெகநாதன் இறந்ததை உறுதி செய்தனர். இருப்பினும் ஜெகநாதனின் மகன் கவுதம்ராஜ் சென்னை சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications