2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும் பாஜக!: டிசம்பருக்குள் உ.பி. வேட்பாளர் பட்டியல்!!

கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவிட்ட அந்தக் கட்சி இந்தமுறை காங்கிரஸை பதம் பார்க்க தீவிரமாக களமிறங்கியுள்ளது.
விலைவாசி உயர்வு, மெகா ஊழல்கள் என மக்களிடம் கடும் அதிருப்திக்குள்ளாகி நிற்கிறது காங்கிரஸ் கூட்டணி அரசு. இதை மிகச் சரியாக பயன்படுத்தி மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்ப பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.
முதல்கட்டமாக தேர்தலுக்கு தொண்டர்களைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமும், மிக அதிகபட்சமாக 80 எம்பிக்களைக் கொண்ட மாநிலமுமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து தனது தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளது பாஜக.
4 மாதங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் படுதோல்வி அடைந்தன. ஆனால், கடந்த மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 12 மேயர் பதவிக்கான இடங்களில் பாஜக 10 இடங்களைக் கைப்பற்றியது.
இதையடுத்து பாஜகவுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக உத்தரப் பிரதேசத்துக்கு உடனடியாக புதிய நிர்வாகிகள் நியமிக்கவும் கட்சியை பலப்படுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
மேலும் அந்த மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வேலையையும் அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கவும், டிசம்பர் மாதத்துக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடவும் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து சுமார் ஓராண்டு காலம் இந்த வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க வைக்கவும் மெகா பிளான் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications