அடப்பாவி மகனே... மனைவி பேச்சைக் கேட்டு பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்!
விஜயநகரம் (ஆந்திரா): மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயை, அவரது 70 வயதையும் பொருட்படுத்தாமல் நைசாக ஏமாற்றிப் பேசி சுடுகாட்டில் விட்டு விட்டுப் போய் விட்டார் ஒரு ஆந்திர இளைஞர். நெஞ்சப் பதற வைக்கும் இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வயது 70 ஆகிறது. இவருக்கு ஒரே மகன், பெயர் சீனு. சீனுவுக்குத் திருமணமாகி விட்டது, மனைவி, குழந்தைகள் உள்ளனர். மகனுடன் வசித்து வந்தார் இந்த மூதாட்டி.
தனது மாமியாரை சீனுவின் மனைவி மதிப்பதில்லையாம். எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாராம். மேலும், இந்தக் கிழவியை எங்காவது போய் விட்டு விட்டு வாங்க என்றும் சீனுவுன் சண்டை போட்டபடி இருப்பாராம்.
மனைவியா, தாயா என்று குழம்பிப் போன சீனு கடைசியில் மனைவியின் பேச்சுக்கு மதி மயங்கி, தாயை எங்காவது கொண்டு போய் விட்டு விட முடிவு செய்தார். இதையடுத்து வெளியில் போய் விட்டு வரலாம் என்று கூறி தாயாரை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நேராக விசாகப்பட்டனம் வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் ஸ்ரீராம் நகர் என்ற இடத்திற்குப் போனார். அங்குள்ள சுடுகாட்டுக்கு வந்த அவர் அங்கு தாயாரை உட்கார வைத்து விட்டு சிறிது நேரத்தில் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்றார். பிறகு வண்டி ஏறி தனது ஊருக்குத் திரும்பினார்.
மகன் சாப்பாடு வாங்கி வருவான் என்று பரிதாபமாக காத்திருந்த அந்த மூதாட்டி, நீண்ட நேரமாகியும் மகன் வராததால் பரிதவித்துப் போனார். இப்படியே கிட்டத்தட்ட 10 நாட்களாகி விட்டது. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுடுகாட்டிலேயே படுத்துக் கிடந்துள்ளார் இந்த பரிதாபத் தாய்.
இனியும் மகன் வர மாட்டான் என்று அவருக்குத் தெரிந்து போனதால் அப்படியே மெதுவாக எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று ஊருக்குப் போனார். ஆனால் பசி மயக்கம் தாங்க முடியாததால் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
பதறிப் போன ஊர் மக்கள் அவருக்கு சாப்பாடு கொடுத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் அந்த மூதாட்டியின் மகனைக் கண்டுபிடித்து அவரிடம் தாயாரை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த மகனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது பொருத்தமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்...












Click it and Unblock the Notifications