விருத்தாசலத்தில் அதிமுக-திமுகவினர் பயங்கர அடிதடி: கட்சி பேனர்கள் கிழிப்பு, எரிக்கப்பட்ட பைக்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அதிமுக, திமுக கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில், திமுக கட்சி பேனர்கள் கிழிக்கப்பட்டது. மேலும் திமுக ஆதரவாளர் வீ்டு சூறையாடப்பட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் விருத்தாசலம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(40). இவர் அதிமுக ஆதரவாளர். இவரது வீட்டிற்கு முன்பு நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை காந்தி நகரை சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், சுசீந்திரன், முருகவேல், தினேஷ்குமார், கணேஷ் ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.
இதில் அதிருப்தியடைந்த சேகர், இது குறித்து விருத்தாசலம் நகரமன்ற துணைத் தலைவர் சந்திரகுமாருக்கு (அதிமுக) தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சந்திரகுமார், அங்கிருந்தவர்களிடம் தகராறு குறித்து கேட்டுள்ளார். அப்போது திமுகவினர் 5 பேரும் சேர்ந்து, நகரமன்ற துணைத்தலைவர் சந்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், சுசீந்திரன், தினேஷ் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன் வீட்டிற்குள் புகுந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல், வீட்டிலிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் வீட்டிற்கு வெளியே நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.
இதை தட்டி கேட்ட மதிவாணன் தாய் ஆனந்தநாயகியை இரும்பு பைப்பால் தாக்கிய மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயமடைந்த ஆனந்தநாயகி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் நள்ளிரவில் பாலக்கரை, பஸ் நிலையம், காந்தி நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதை நேற்று காலை கண்டு ஆத்திரமடைந்த திமுகவினர், நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். விருத்தாசலம் நகரில் உள்ள திமுக, அதிமுக கட்சியினர் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications