9 ஆண்டுகளாக காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டாதது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

தமிழ்நாட்டுக்கு நடப்பு ஆண்டில் திறந்துவிடப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. இதனால் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. கோடைகாலத்தில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால் தமிழகத்துக்கான காவிரி நீரைத் திறந்துவிடாமல் அதனை கர்நாடகத்திற்கு பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருந்தது. இதனை தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இதையடுத்து ஆகஸ்ட் 17-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தின் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
மத்திய அரசு மீது காட்டம்
இந்த வழக்கின் விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கடந்த 9 ஆண்டுகளாக காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டாமல் இருந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் காட்டம் காட்டியது.
தமிழக அரசு தொடர்ந்து வழக்கின் மீது கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications