நன்றி விசுவாசமான நாய்: பாம்பை கடித்துக் கொன்றுவிட்டு உயிரிழந்தது
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வீட்டு எஜமானரை காப்பாற்றுவதற்காக நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைய முயன்ற விஷபாம்பை வளர்ப்புநாய் கடித்துக் கொன்றது. பாம்பின் விஷம் உடலில் பாய்ந்ததால் நாயும் உயிரிழந்தது. இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே உள்ள பரமார்த்தலிங்கபுரம் கால்வாய்கரை பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ். இவர் தனது வீட்டில் கிரேட்டன் வகையைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தார். கால்வாய் கரையில் இவரது வீடு இருப்பதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கும். அடிக்கடி பாம்புகள் இவரது வீட்டை எட்டிப்பார்க்கும் 2 நாய்களும் குரைத்து பாம்புகளை விரட்டி வந்துள்ளன.
இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. வர்க்கீஸ் மற்றும் அவருடைய மனைவி, குழந்தைகள் எழுந்து வெளியே எட்டிப்பார்த்தனர். பின்னர் பாம்பு ஏதாவது வந்திருக்கும் என அவர்கள் புரிந்து மீண்டும் படுக்கச் சென்று விட்டனர். பிறகு ஞாயிறன்று எழுந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன் ஒரு நாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் வாயில் நுரை தள்ளியிருந்தது. உடனே சுற்றும் முற்றும் பார்த்தனர். அப்போது அருகில் 5 அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று 2 துண்டாக கிடந்தது.
நள்ளிரவில் வீட்டுக்குள் புக முயன்ற பாம்பினை நாய் கடித்துக் கொன்றுவிட்டு விஷம் உடலில் ஏறி நாயும் இறந்து போனதை எண்ணி அவர்கள் வேதனை அடைந்தனர். தங்களது உயிரைக் காக்க தனது உயிரை விட்ட வளர்ப்பு நாயின் விசுவாசம் வர்க்கீஸ் குடும்பத்தினரின் மனதை நெகிழச்செய்தது. இந்த தகவலை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இறந்துபோன நாயையும், பாம்பையும் பார்த்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications