முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் மீது வீடு அபகரிப்பு, கொலை மிரட்டல் புகார்
சென்னை: சென்னையில் தனியாருக்கு சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்து தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் அலுவலகத்தை அமைத்ததாகவும், அதை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த இவர், முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது வீடு அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
சென்னை ராயப்பேட்டை ரசூல் உண்ரா பகதூர் 4வது தெருவில் எனக்கு சொந்தமாக 1551 சதுர அடியில் வீடு உள்ளது. இதை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி விலைக்கு வாங்கினேன். அதன்பிறகு என்னிடம் டிரைவராக பணிபுரிந்து வரும் தமீம் அன்சாரி என்பவருக்கு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டேன். மற்றொரு பகுதியை எங்களின் சொந்த பயன்பாட்டிற்காக பூட்டி வைத்திருந்தேன்.
அதில் 29 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம், சொத்து பத்திரங்கள் ஆகியவை இருந்தன. அடிக்கடி அந்த வீட்டை போய் நான் பார்த்து வருவது வழக்கம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை பார்க்க சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகி இருந்தது.
இந்த நிலையில் எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர் பாசறை மாநில செயலாளர் அலுவலகத்தை துவங்கி உள்ளனர். கடந்த மாதம் (ஜூலை) 28ம் தேதி இதற்கு திறப்பு விழா நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், தீரன், காவேரி, சண்முகம் மற்றும் பலர் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதை குறித்து தட்டி கேட்டால், என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். மேலும் என்னை துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுகின்றனர். எனவே எனக்கு தக்க பாதுகாப்பு அளித்து, வீட்டை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications