வங்கதேசம் போல இலங்கையில் தனித் தமிழீழத்தை உருவாக்க வேண்டும்: இந்து அமைப்புகள் வலியுறுத்தல்

வேலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து ஈழ ஆதரவு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சியினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து உள்ளரங்க நிகழ்ச்சியாக மாநாடு நடத்தப்பட்டது.
ராணுவம் மூலமே தீர்வு
மாநாட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
காங்கிரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து கருணாநிதி அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். நாங்கள் தெளிவான அறிவிப்போடு இந்த மாநாட்டை நடத்துகிறோம். பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தபோதும் உள்ளரங்க நிகழ்ச்சியாக மாநாட்டை நடத்துகிறோம். எங்களைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரத்தரத் தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் மட்டும்தான். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமையோடு வாழ்வது சாத்தியமில்லை. நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி காலத்தில் பல முயற்சிகளைச் செய்தும் இலங்கையில் அமைதி ஏற்படவில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வுக்கு சாத்தியமில்லை, ராணுவத் தீர்வு மட்டும்தான் சாத்தியம். வங்கதேசம் உருவாக்கப்பட்டதுபோல் தனித் தமிழ் ஈழத்தையும் ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர்.
தமிழீழமே தீர்வு
இதேபோல் செய்தியாளர்களிடம் ஸ்ரீராம் சேனை நிறுவனத் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறியதாவது:
எங்கே இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும் அதை தடுக்க ஸ்ரீராம் சேனை பல முயற்சிகளை செய்துவருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையை 10 கோடி தமிழர்களின் பிரச்னையாக பார்க்காமல் 150 கோடி இந்துக்களின் பிரச்னையாக பார்க்கிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு ஆதரவாக கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இலங்கையிலே இந்து தமிழர்களை உருவாக்க தனித் தமிழ் ஈழம் வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது தனித் தமிழ் ஈழம் ஒன்றுதான் இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டப் பேரவையில், இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications