மெல்ல மெல்ல உயருகிறது மேட்டூர் நீர்மட்டம்!

கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும், குடகு, மாண்டியா, மைசூர் ஆகிய மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளான உடுப்பி, பண்ட்வால், பெல்தங்கடி ஆகிய பகுதிகளிலும் பருவமழை பெய்து வருகிறது. கனமழையால் குமுதவதி, நேத்ராவதி உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் கர்நாடக மாநிலத்தின் உள்பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கர்நாடக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அல்மாட்டி, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அலமட்டி, கபினி அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி விட்டன. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்தத் தண்ணீர் தற்போது தமிழகத்திற்குள் வந்து மேட்டூரை எட்டி விட்டன.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர ஆரம்பித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு அணையில் 73.35 அடி நீர் இருந்தது. நேற்று விநாடிக்கு 11,805 கன அடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது.
இருப்பினும் நேற்று மாலையில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது. தற்போது நீர்மட்டம் 74.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 9551 கன அடியாகவும் உள்ளது.
இதற்கிடையே, போதிய நீர் இல்லாததால் காவிரிப் பாசனப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலைமையை சமாளிக்க காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் 80 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்று உள்ளது.
கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பருவ மழை தீவிரமடைந்து நல்ல மழை பெய்யத் தொடங்கினால், அணை நீர்மட்டம் 90 அடியை எட்டி அணை திறக்கப்படும் என்பதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications