குரூப் 2 தேர்வு கேள்வித்தாள் அவுட்? வினா-விடை தாளுடன் வந்தவர் கைது-5 பேர் மீது வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குருப்-2 தேர்வு எழுத வினா-விடை தாளுடன் வந்ததாக கூறப்படும் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேள்வித்தாள் நகல் வைத்திருந்ததாக ஈரோட்டை சேர்ந்த கணவன்-மனைவியிடம் விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத அரூரை அடுத்த முத்தானூரை சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்குமார்(35) என்பவர் காலை 10.10 மணிக்கு வந்தார்.

தேர்விற்கு தாமதமாக வந்த சுரேஷ் குமாரிடம், சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் தேர்வின் வினா-விடை தாள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை அதிகாரிகள் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது அரூர் உதவி கலெக்டர் காமராசர் மற்றும் போலீசார் விசாரித்தனர். இது குறித்து அரூர் துணை தாசில்தார் கருப்பசாமி கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமீத்குமார் சிங் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று, சுரேஷ்குமாரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் சுரேஷ் குமார், திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கராஜ் என்பவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்து குரூப்-2 தேர்வு கேள்வித்தாளை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக தானிப்பாடியை சேர்ந்த ஆசிரியர் விவேகானந்தன், திருவண்ணாமலையை சேர்ந்த ரங்கராஜ், குமார், முத்தானூரை சேர்ந்த அருண், அரூரை சேர்ந்த ரபேஸ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஈரோட்டில் சிக்கிய பெண்:

ஈரோடு பிரப் சாலையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் குரூப்-2 தேர்வு எழுத வந்த பெண் ஒருவரிடம், தேர்வு கேள்வித்தாளின் சில பக்கங்கள் இருப்பதாக தேர்வு எழுதிய சிலர் சந்தேகமடைந்தனர். தேர்வு முடிந்த பிறகு அந்த பெண்ணிடம் இருந்த கேள்வித்தாளை வாங்கி பார்த்த போது, கையால் எழுதப்பட்ட நகல் கேள்வித்தாளின் 131வது கேள்வியில் இருந்து 170 கேள்வி வரை, குரூப்-2 தேர்வு தாள் அப்படியே இருந்தது. நகலில் கேள்வியும், அதன் பதிலும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்வு எழுதியவர்களில் சிலர், சந்தேகத்திற்கு இடமான பெண்ணுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தனர். கலெக்டர் இல்லாததால், மாவட்ட வருவாய் அதிகாரி கணேஷிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்தார்.

விசாரணையில் பிடிப்பட்ட பெண், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தனக்கொடி(26) என்பதும், அவரது கணவர் செந்தில்(30) உடன் தேர்வு எழுத பஸ்சில் வந்த போது, ஒருவர் கேள்வித்தாளின் நகலை அளித்ததாகவும் தெரிவித்தார்.

இது குறித்து தனக்கொடி கூறியதாவது,

குரூப்-2 தேர்வு எழுதுவதற்காக நேற்று பவானியில் இருந்து ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தேன். அப்போது பஸ்சில் இருந்த ஒருவர் எனது கணவரிடம் கையால் எழுதி நகல் எடுக்கப்பட்ட இந்த கேள்வித்தாளை கொடுத்தார். அதில் கேள்வியும், பதிலும் எழுதப்பட்டு இருந்தது.

அதை வைத்து நான், தேர்வு எழுத வந்த சிலருடன் சேர்ந்து படித்தேன். அதில் எழுதப்பட்டு இருந்த பல கேள்விகள் தேர்வின் போது வழங்கப்பட்ட கேள்வித்தாளிலும் இடம்பெற்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நான், தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்து நகல் கேள்வித்தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தேர்வில் கேட்கப்பட்ட 40 கேள்விகள் என்னிடம் இருக்கும் நகலில் இடம் பெற்று இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

குரூப்-2 தேர்வின் கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக பவானியை சேர்ந்த தனக்கொடி மற்றும் அவரது கணவர் செந்தில் ஆகியோரிடம், ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரித்தனர்.

ஈரோட்டில் கேள்வித்தாள் வெளியான தகவலைத் தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மைய நிர்வாகி ராசப்பன் என்பவரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த மையத்தில் படித்த 800 பேர் தேர்வு எழுதி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. ஈரோட்டியில் குரூப்-2 தேர்வின் கேள்வித் தாள் வெளியானதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+