அட ஏங்க நீங்க வேற, மார்க் போட்டா கேஸ் போடுறாங்க.. விஜயகாந்த் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
திருச்சி: அதிமுக அரசு குறித்து ஏற்கனவே மார்க் போட்டதற்காகத்தான் என் மீது வழக்கு போட்டார்கள். இருந்தாலும் இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திருச்சியில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார் விஜயகாந்த். பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இரவு நடைபெற்றது.

அதில் பேசிய விஜயகாந்த், வெள்ளையர்களிடமிருந்து போராடி நம் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றவர்கள் நமது தியாகிகள். ஆனால் 66 ஆண்டுகளுக்கு முன்னர் போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று ஊழலால் கெடுத்து விட்டனர்.

ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவதுதான் நடைமுறை. இதை செய்பவர்களுக்கு இங்கு பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்படுகிறது. கருணாநிதி, ஸ்டாலின் மீதும், என் மீதும் வழக்குகள் போட்டுள்ளனர்.

சுகாதாரம், குடிநீர், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைதான் மக்களின் அத்தியாவசியத் தேவைகள். இதை ஆட்சியாளர்களால் முழுமையாக வழங்க முடியவில்லை.

விவசாய பூமியான தமிழகத்தில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. பாம்பு, நாய் கடிகளுக்கு மருந்துகள் இல்லை.

தமிழகத்தில் கிரானைட் ஊழல், மணல் குவாரியில் ஊழல் என எத்தனையோ ஊழல்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தமிழக அமைச்சர்கள் எவரும் வாய்த் திறக்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 3,500 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வில் 6.5 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். வினாத் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகியுள்ளது.

கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, இந்த தேர்வை எழுதியிருப்பார்கள். இதுகுறித்து முதல்வர் எதுவுமே பேச மறுக்கிறார்,

கிராம மக்களின் கஷ்டத்தைப் போக்குகிறோம் எனக் கூறி ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் அதைப் பெறுவதற்கும் நூறு, இருநூறு என லஞ்சம் வழங்க வேண்டியுள்ளது.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றை மாற்றப் போகிறோம் எனக் கூறுகின்றனர். இது தேவையற்றது.

அன்று வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றதைப் போன்று, சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் கழித்து கொள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார் விஜய்காந்த்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு தினம் ஒரு இலவச அறிவிப்புகளை வெளியிடுகிறது. கஜானா காலி என்றவர்கள் எப்படி இதை நிறைவேற்றுவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

அதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. குவாரியில் ரூ.35 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 1993லிருந்தே குவாரி முறைகேடு நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய கிராம நிர்வாக அதிகாரி முதல் கனிம வள அதிகாரி வரை வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரி அதிபர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மாறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், கண்டிப்பாக மாறும். தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றார்.

சரி, டெசோ மாநாடு பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது,

இதை அவர் கடந்த ஆட்சியிலேயே செய்திருக்க வேண்டும். அப்போது அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இப்போது செய்வது என்ன பிரயோஜனம் என்றார்.

அடுத்த முக்கியக் கேள்விக்கு நிருபர்கள் வந்தனர். ஒரு எதிர்கட்சித் தலைவராக அதிமுக அரசுக்கு எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்று கேட்டதுதான் தாமதம். உடனே விஜயகாந்த், ஏற்கனவே மார்க் போட்டதற்காகத்தான் என் மீது வழக்கு போட்டார்கள். இருந்தாலும் இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை என்றார் சற்றே வேகமாக.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+