திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.பெரியகருப்பனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன். ஆனால் அவரது வெற்றியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த சந்தானகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு தேர்தல் அதிகாரி ஆதரவாக செயல்பட்டார். இதுபற்றி புகார் கூறியும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெரிய கருப்பன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து பதில் அளிக்குமாறு பெரியகருப்பன் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதன் பிறகு நடந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரும் சரி, அவரது வழக்கறிஞரும் சரி ஆஜராகவில்லை. ஆனால் கே.ஆர்.பெரியகருப்பன் சார்பில் அவரது வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜரானார்.
இதையடுத்து பெரியகருப்பனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications