For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் அராஜகங்களைக் கூறினால் அவதூறு வழக்கு போட்டு வாய்பூட்டு மாட்டி பழி வாங்குகிறார்கள்: திமுக

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள திமுகவினர் அமைதிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத காரணத்தால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கான பணிகள் தொடங்கப்படாமல், குறுவை பொய்த்துப் போன நிலையில் விவசாயிகள் என்ன செய்வதென்று வழி தெரியாமல் விழி பிதுங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பே கிடைக்காமல் வேதனையில் இருக்கிறார்கள். கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிமெண்ட் விலை உயர்வு காரணமாக கட்டிடத் தொழிலாளர்களுக்கும் பணிகள் கிடைக்கவில்லை என்று கண்ணீர் சிந்துகிறார்கள்.

சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் ஆளுங்கட்சிக்காரர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாங்குவதை வாங்கிக் கொண்டு பரிந்துரை செய்வதாக அன்றாடம் தொடர்ந்து அடுக்கடுக்காகப் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. "நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின் தட்டுப்பாட்டைப் போக்குவோம்" என்று வாக்குறுதி கொடுத்த போதிலும், நாளுக்கு நாள் மின் தட்டுப்பாடு அதிகமாகிக் கொண்டே போகிறது.

முதல்வர் விவாதம் நடத்துகிறாரே தவிர, நாள்தோறும் உத்தரவிடுகிறாரே தவிர, அவரது உத்தரவுக்குப் பணிந்து மின்வெட்டு நின்றபாடில்லை. இன்றைய ஏடுகளில் வந்துள்ள செய்திப்படி அன்றாடம் 12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு நேரம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

18-8-2012 அன்று 10,256 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது என்பதற்கு மாறாக 23-8-2012 அன்று 7,419 மெகாவாட் மின்சாரம் மட்டுமே இந்த ஆட்சியாளர்களின் அபாரத் திறமை(?) காரணமாகக் கிடைத்துள்ளது. அன்றாடம் ஏடுகளைப் புரட்டினால் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு என்றுதான் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. இவைகளைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருப்போர் அணுவளவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அவர்களது கவலையும் கவனமும் எந்தெந்த அமைச்சர்களுக்கு பதவி போகப்போகிறது, யார் யாருக்குப் புதிதாக வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதிலே தான் உள்ளது. காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும், நடப்பாண்டில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாகவும், வேலை இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாகவும் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்து பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் போராடியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிக்காரர்கள் மற்றும் ஒரு சில ஏடுகள் இந்த ஆட்சியில் நடைபெறும் அராஜகங்களையும் முறைகேடுகளையும் எடுத்துச் சொன்னால் உடனே அவதூறு வழக்கு என்ற பெயரால் வழக்குகளைப் போட்டு, வாய்ப்பூட்டு மாட்டி பழி வாங்கப் பார்க்கிறார்கள். இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டிக்கின்ற வகையிலும், புழுங்கித் தவிக்கும் பொதுமக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லும் முறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நம்முடைய திமுக தொண்டர்கள் அவர்களாகவே ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் ஆங்காங்கு நடத்தி அரசினர் கவனத்தை ஈர்த்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பொதுப் பிரச்சினைகளைத் தவிர, ஆங்காங்குள்ள உள்ளூர் பிரச்சினைகளையும் இணைத்துக் கொண்டு இந்த அறவழி அமைதிப் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்குவது யார், முன்னிலை வகிப்பது யார் என்பதை மாவட்டக் கழகங்களே பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Power cut time has been increased to 12 hours a day in many parts of the state. So, DMK has decided to protest condemning this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X