For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் குவாரிகளை அரசு உடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடும் முடிவை கைவிட்டு, ஏற்கனவே செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணையில் நாள் தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலின் மதிப்பு மட்டும் ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டு என்றும், இந்த முறைகேட்டில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்பாக கனிம வளம் மற்றும் வருவாய் துறைகளை சேர்ந்த 9 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கிரானைட் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் விசாரணையில் உள்ளது.

ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். அனைத்து குவாரிகளிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் விற்பனையை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, நாமக்கல், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் குவாரிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகளும் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தால் கோரப்பட்டு உள்ளது.

கிரானைட் ஊழலிலோ அல்லது வேறு முறைகேட்டிலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊழலில் தொடர்புடைய பல நிறுவனங்கள் பினாமி பெயர்களில் ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் கிரானைட் ஊழலை அடியோடு தடுக்க அனைத்து கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை அரசு பரிசீலித்து வரும் நிலையில், புதிய கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுவது முறையானதாக இருக்காது.

ஏற்கனவே ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களே இந்த குவாரிகளையும் ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதால், இது ஊழலுக்கே வழி வகுக்கும். மிகவும் அரிதான இயற்கை வளங்களை நாட்டின் சொத்துக்களாக கருதி பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் பல முறை வலியுறுத்தி உள்ளது.

எனவே 9 மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PMK leader Ramadoss said that, Granite quarries in the state should come under government properity. The granite quarries lease plan should be avoided.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X