For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கொடுப்போம்.. சீரான மின்சாரம் கொடுப்போம்... நம்புங்க!' - மின்துறை அமைச்சர்

By Shankar
Google Oneindia Tamil News

TN govt assures uninterrupted power
சென்னை: தமிழகத்தில் மின்சாரம் என்பது கிட்டத்தட்ட இல்லாத சமாச்சாரமாகிவிட்ட நிலையில், ஒரு நீ...ண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

வழக்கம் போல புள்ளி விவரங்களும், சீரான மின்சாரம் தருவோம் என்ற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளஅந்த அறிக்கையில் "தமிழகத்தில்தான், நாட்டின் மொத்த அளவு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியான 21903.8 மெகாவாட்டில் 36.1 சதவீதம் அதாவது 7913.57 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யும் திறன் நிறுவப்பட்டுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் இந்த அளவு சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்பாட்டில் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின் உற்பத்தித் திறன் முழுக்க முழுக்க திமுக ஆட்சியில்தான் நிறுவப்பட்டது, இனி பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது அறிக்கை முழுமையாக:

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 11,500 முதல் 12,800 மெகாவாட் ஆகவும் மற்றும் தினசரி பயன்பாடு 230 முதல் 250 மில்லியன் யூனிட் ஆகவும் உள்ளது.

இந்தத் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் திட்டங்கள் மூலம் 3,000 மெகாவாட், எரிவாயு மூலம் 500 மெகாவாட், காற்றாலை மூலம் 3000 மெகாவாட், மத்திய தொகுப்பு மூலம் 3,000 மெகாவாட், தனியார் மின் நிறுவனங்கள் மூலம் 1,180 மெகாவாட் திறனும், நீர் மின் நிலையங்கள் மூலம் மீதத் தேவைக்கும் மின் உற்பத்தி பெறப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் மின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதனால், தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், உற்பத்தி செய்யும் அளவிற்கும் இடையே 3500 மெகாவாட் அளவிற்கு மிகப்பெரிய இடைவெளி எற்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் மிகுந்த துயருக்கு ஆளாகியும், தொழிற்சாலைகள் நலிவடையும் நிலைமைக்கும் தள்ளப்பட்டன.

முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எரிசக்தித் துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழக அதிகாரிகளுடன் பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி புதிய மின்திட்டப் பணிகளை முடுக்கிவிட்டார். தொடர் நடவடிக்கையாக முதல் அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில், முதல் அமைச்சரின் சீரிய ஆலோசனைகளை பெற்று, தமிழ்நாட்டில் மின் உற்பத்தித் திறனை கூட்டுவதற்கு புதிய மின் திட்டப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து, 3300 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தியை விரைவில் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில்தான், நாட்டின் மொத்த அளவு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியான 21903.8 மெகாவாட்டில் 36.1 சதவீதம் அதாவது 7913.57 மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யும் திறன் நிறுவப்பட்டுள்ளது.

உலகின் எந்தப் பகுதியிலும் இந்த அளவு சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்பாட்டில் இல்லை. இதில், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் கடந்த 19 ந் தேதியில் 3980 மெகாவாட் அளவாக இருந்தது. இது, நேற்று முன்தினம் 299 மெகாவாட் அளவிற்கு குறைந்தது. இதை ஓரளவேனும் ஈடுகட்ட நீர்மின் நிலையங்கள் மூலமாக தேவையான மின் உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆனால், பருவமழை மிகக் குறைவாகவே இந்த ஆண்டு பெய்து நீர் நிலைகளில் குறைவான கொள்ளளவே பெறப்பட்டுள்ளது. மேலும், மத்திய தொகுப்பில் தேசிய மின் உற்பத்திக் கழகத்தின் (என்.டி.பி.சி.) ஆந்திரா-ராமகுண்டம், ஒரிசா- தால்சர் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி குறைபாட்டினால் 1045 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு மின்சாரம் குறைவாகவே கிடைக்கிறது.

இருப்பினும், பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தமிழக மக்களுக்கு மின் தேவையை குறித்த மின் கட்டுப்பாட்டு முறைகளின்படி பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தென் மண்டல தொகுப்பிற்கு மின்சாரம் வர வேண்டிய மின் தொடரில் ஏற்படும் மின்சுமை காரணமாக தமிழகம் உட்பட மற்ற தென் மாநிலங்களிலும் நிலவும் பற்றாக்குறை அதிகபட்சமாக உள்ளது.

கடந்த 24-ந் தேதி அதிகபட்ச தேவையின் மின்பற்றாக் குறை ஆந்திராவில் 26 சதவீதமாகவும் கர்நாடகத்தில் 19.5 சதவீதமாகவும், தமிழகத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. தென் மண்டல கட்டமைப்பை நாட்டின் பிற மின் கட்டமைப்பில் இணைக்கக் கூடிய முக்கியமான மின் தொடர்கள் அமைக்கும் பணி மத்திய அரசின் நிறுவனங்களால் குறித்த காலத்தில் நிறைவு பெறாமல் இருக்கிறது.

இப்பணி எதிர்வரும் 2014-ம் ஆண்டு நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக மின்வாரியம், குஜராத் மற்றும் வடமாநிலங்களிலிருந்து 855 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்ய பணம் பட்டுவாடா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தாலும், 27 சதவீதமாகிய 232 மில்லியன் யூனிட்டே கட்டமைப்பில் பெறப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்த வழிமுறைகளின் படியும், மின்சாரக் கொள்முதல் அளவிற்கும், விலைக்கும் வரம்பு விதித்ததின் காரணமாகவும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவும் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்ய இயலவில்லை.

மத்திய ஒழுங்குமுறை ஆணையம் இந்திய கட்டமைப்பின் அதிர்வெண்ணை (49.50 - 50.20 ) என்ற அளவிலிருந்து (49.70 - 50.20) என்ற அளவில் இயக்குவதற்கும், திட்டமிடா மின் பரிமாற்றத்திற்கான நிர்ணய கட்டணத்தை அதிகரித்தும் இந்திய கட்டமைப்பு விதியில் மாற்றங்களை அமல்படுத்த ஆணையிட்டது.

மேற்படி உத்தரவு தமிழகத்திற்கு கூடுதலான நிதிச்சுமை மற்றும் பயனீட்டாளர்களுக்கு மேலும் மின் தடை செய்ய நேரிடும் என்பதால், முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கடிதம் எழுதி இந்த மாற்றங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஆணையிட கேட்டுக் கொண்டார்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், இவ்வாணையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது. ஆயினும், மத்திய ஒழுங்குமுறை ஆணையம் இத்தடையை எதிர்த்து புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மேலும், கடந்த ஜுலை 30-ந் தேதி வடக்கு மின் கட்டமைப்பிலும், 31-ந் தேதி வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக தென் மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் நீங்கலாக நாட்டின் அனைத்துப் பகுதியிலும் 22 மாநிலங்களில் மிகப்பெரிய மின் தடை ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு மத்திய மின்கட்டமைப்பு நிர்வாகம் கடந்த 16-ந் தேதிமுதல் மின்கட்டமைப்பின் அதிர்வெண் 49.50 எச்.இசட் என்ற அளவிற்கு கீழ் செல்லும் நிலையில் மின் கட்டமைப்பின் இயக்க விதிமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது. தடையை மீறும் பட்சத்தில் தண்டனை முறைகளையும் கடுமைப்படுத்தியதோடு அல்லாமல் மாநிலங்களுக்கு இடையேயான மின் தொடரை தானாக துண்டிக்கும் வழிவகையும் செய்துள்ளது.

எனவே, பெங்களூரில் உள்ள தென்மண்டல கட்டுப்பாட்டு மையம் விதிக்கும் உத்தரவுகளை மின் கட்டமைப்பு பாதுகாப்பு விதிகளின்படி கண்டிப்பாக அனுசரிக்க வேண்டியுள்ளது. இதனால் மின்தடை ஏற்படுத்தப்படுவதை தவிர்க்க இயலவில்லை. தென்மண்டல கட்டுப்பாட்டு மையம் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க கடந்த 16-ந் தேதிமுதல் மின் தொகுப்பு கட்டமைப்பின் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழகத்தில் நடைபெற்று வரும் புதிய மின் திட்டங்களில், உற்பத்தி மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. அவ்வாறு மின் உற்பத்தி தொடங்கப்பட்டவுடன் தமிழக மக்களுக்கு விரைவில் சீரான மின்சாரம் வழங்க முடியும்.

தற்போது மின்தடையால் ஏற்படும் சிரமங்களைக் களைய தமிழக அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகம் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Natham Vishwanathan, TN minister for Power and Energy has assured as usually that the govt would rectify the power cut issue soon.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X