பெ விஸ்வநாதன் எனும் நான்.. அமைச்சராகும் மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ? யார் இவர்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் மேலுர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ள செங்கல்பட்டு தாழம்பூரை சேர்ந்த பெ விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. மேலூர் மண்ணில் கக்கன் காலத்து வரலாற்றுப் பெருமையை மீட்டெடுத்த இந்த விஸ்வநாதன் யார் என்ற விவரங்களை இங்கு காணலாம்.
தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் இதில் இடம்பெறுகிறது. தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கெடுக்கிறது. எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பெ. விஸ்வநாதன் 2,731 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். பொது தொகுதியான மேலூரில், காங்கிரஸ் சார்பில் கடைசியாக தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதனை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது முதல் தொகுதியாக காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை இவர் தான் பெற்று தந்தார்.
யார் இந்த விஸ்வநாதன்
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாக இருந்தவர் பி. விஸ்வநாதன், தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநில பொறுப்பாளராகவும் விஸ்வநாதன் இருந்து வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பிய விஸ்வநாதன் தனது விருப்பத்தை கட்சி மேலிடத்தில் தெரியப்படுத்தினார்.
இதையடுத்து, அவருக்கு மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தது. பொதுத்தொகுதியான மேலுரில் பட்டியலினத்தை சேர்ந்த விஸ்வநாதனுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தது.
தாழம்பூரை சேர்ந்தவர்
இந்த தொகுதியில் 60,080 வாக்குகள் பெற்ற விஸ்வநாதன் தவெக வேட்பாளர் மதுரை வீரானை விட 2,724 வாக்குகள் அதிகம் பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுக சார்பாக போட்டியிட்ட பெரியபுல்லன் என்ற செல்வம் 56,744 வாக்குகள் பெற்றார். பொதுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், விஸ்வநாதன் எம்.எல்.ஏவின் வெற்றி அப்போது தமிழகம் முழுக்க கவனம் பெற்றது.
அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் தவெக கேபினட்டில் இடம் பிடிக்கும் அமைச்சராக உள்ளார் விஸ்வநாதன். விஸ்வநாதன் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரை சேர்ந்தவர். 61 வயதான இவர் சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வென்றார்.
கக்கனுக்கு பிறகு..
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், 27 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும் மேலூர் தொகுதியை கைப்பற்ற தமிழக காங்கிரஸ் புள்ளிகளிடையே கடும் போட்டி நிலவியது. இந்த இக்கட்டான சூழலில்தான், முன்னாள் எம்பியும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
2009-2014 காலகட்டத்தில் காஞ்சிபுரம் எம்.பி-யாக இருந்த விஸ்வநாதன், 87 சதவீத வருகைப்பதிவு, 38 விவாதங்கள் மற்றும் 658 கேள்விகள் என நாடாளுமன்றத்தில் அவரது 'பெர்பார்மன்ஸ்' அருமையாக இருந்தது. அந்த வரலாற்றுப் பின்னணியையும், விஸ்வநாதனின் அனுபவத்தையும் கருத்தில் கொண்டே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 1957-ல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கக்கன், மேலூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு பிறகு இந்த தொகுதியில் விஸ்வநாதன் வெற்றி வாகை சூடியுள்ளார். தற்போது அமைச்சராகவும் இவரே பதவி ஏற்க உள்ளார்.
2011 தேர்தலில் மதுரவாயலில் பீம் ராவ் (சிபிஎம்) மற்றும் பல்லாவரத்தில் தன்சிங் (அதிமுக) ஆகியோர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே கடைசியாக இருந்தது. அதன் பிறகு தமிழக தேர்தல் வரலாற்றில் நீண்ட இடைவேளைக்குப் பின், ஒரு பொதுத் தொகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் வெற்றி வாகை சூடியுள்ளார்.














Click it and Unblock the Notifications