ஒரே மாதத்தில் ₹18,000 சரிந்த தங்கம்.. 2008-க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய தங்க விலை நிலநடுக்கம்!
சென்னை: நிறைவடைந்துள்ள ஜூன் மாதம் முழுவதும் தடால் தடாலென சரிந்து வந்தது தங்கம் விலை. 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் சுமார் ரூபாய் 18,000 வரை சரிந்துள்ளது. கடந்த 2008 அக்டோபருக்கு தங்கம் விலை மோசமான வீழ்ச்சியை சந்திப்பது இப்போதுதான். இந்தச் சரிவுக்கு உலகப் பொருளாதாரக் காரணிகளே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்குப் பிறகு, தங்கம் சந்தித்த மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சி இதுதான் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 1,000-ஐ தொட்டது. 2008 அக்டோபரில் தங்கம் விலை கடுமையாகச் சரிந்திருந்தது.

இந்த ஜூன் மாதத்தில் என்ன நடந்தது?
கடந்த ஜூன் 1-ஆம் தேதி அன்று 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ₹1,59,590 ஆக உச்சத்தில் இருந்தது. ஆனால், ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி 10 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹1,42,420 ஆகக் குறைந்துள்ளது.
ஒரே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட ₹17,170 (சுமார் 12.5%) சரிவைக் கண்டுள்ளது தங்கம். இந்த அதிரடி மாற்றத்தால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் மீண்டும் அலைமோதத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை இந்த அளவுக்கு சரிய என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் தான் இந்த திடீர் வீழ்ச்சிக்குக் காரணம் என வல்லுநர்கள் 5 முக்கிய காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்:
வலுவடைந்த அமெரிக்க டாலர்: உலகச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவாக இருப்பதால், மற்ற நாட்டு நாணயங்களை வைத்துள்ளவர்களுக்கு தங்கம் வாங்குவது செலவுமிக்க ஒன்றாக மாறியது. இதனால் உலகளவில் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை: அமெரிக்க மத்திய வங்கியான 'ஃபெடரல் ரிசர்வ்' வட்டி விகிதங்களை மாற்றியமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டது தங்கம். தற்போது போர் பதற்றம் சற்று தணிந்துள்ளதால், தங்கம் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து வருவது ஒட்டுமொத்த கமாடிட்டி சந்தையையும் பாதித்துள்ளது.
முதலீட்டாளர்களின் திசை மாற்றம்: தங்கத்தில் முதலீடு செய்வதை விட, அதிக லாபம் தரக்கூடிய பிற நிதி சார்ந்த திட்டங்களில் முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
வெள்ளி விலையிலும் மாற்றம்
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் கடந்த மாதத்தில் கணிசமான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. குறிப்பாக பெங்களூர் போன்ற நகரங்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 வரை குறைந்து, தற்போது கிலோ ₹2,35,000 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. டெல்லி போன்ற சில நகரங்களில் தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை லேசான ஏறுமுகத்தில் இருந்தது.
தங்கம் வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போனதால், திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு நகை வாங்க முடியாமல் கவலையில் இருந்த நடுத்தர குடும்பங்களுக்கு இந்த ஜூன் மாத வீழ்ச்சி மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து இந்த விலை மாற்றம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரலாம் என்பதால், நகை வாங்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications