வேலை தேடி வெளிமாநிலம் போக வேண்டாம்.. 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்! அமைச்சர் கீர்த்தனா உறுதி!
விருதுநகர்: வேலை தேடி வெளி மாநிலங்கள் நோக்கி செல்பவர்கள் தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான எம்.என்.சி (MULTI NATIONAL COMPANY) தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும், 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என உறுதி அளித்ததன்படி அதற்கான தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
சிவகாசி அருகே பாறைப்பட்டியில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாச கோளாறு, கண் எரிச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பை கிடங்கை செயல்படுத்தக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் அப்பகுதியினர் கோரிக்கை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று பாறைப்பட்டி குப்பை கிடங்கில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது மக்களுக்கு பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் குப்பை கிடங்கை செயல்படுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விஸ்வநத்தம் சாலையில் அமைந்து வரும் மாநகராட்சி மாநாட்டு அரங்க கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கட்டுமான பணியாளர்களின் விவரங்களை ஒப்பந்தாரரிடம் கேட்டறிந்தார்.
அப்போது, 30 வெளி மாநில தொழிலாளர்களும் 25 உள்ளூர் தொழிலாளர்களும் பணி மேற்கொள்வதாக ஒப்பந்ததாரர் தெரிவித்த போது, ஏன் உள்ளூர் பணியாளர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறீர்கள் என கடிந்து கொண்ட அமைச்சர், இதுபோன்ற அரசு கட்டுமான பணிகளில் உள்ளூர் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா," 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் என உறுதி அளித்ததன்படி அதற்கான தொலைநோக்கு திட்டங்களைசெயல்படுத்துவது தொடர்பாக பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் காலம் காலமாக அடிப்படை தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் சார்ந்த தொழிற்சாலைகள் தான் தற்போது வரை வந்துள்ளது.
எம்.என்.சி (MULTI NATIONAL COMPANY) போன்ற கூடுதல் ஊதியம் பெரும் வகையிலான தொழிற்சாலைகள் மக்களுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. அதுபோன்ற தொழிற் சாலைகளில் வேலை செய்ய ஹைதராபாத், பெங்களூர் போன்ற பெருநகரங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெளி மாநிலங்கள் நோக்கி செல்பவர்கள் தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான எம்.என்.சி தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இளைஞர்களுக்கு தகுந்த திறமையை வளர்க்க அந்தந்த உள்ளூர்களில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிற்சி அளிப்பதற்கான திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் 100% இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிவகாசியில் கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்" என்றார்.













Click it and Unblock the Notifications